சர்வதேச கால்பந்து போட்டி: நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வி…

கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது.

மும்பை,

கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் தரவரிசையில் 97–வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில், 120–ம் நிலை அணியான நியூசிலாந்தை நேற்றிரவு எதிர்கொண்டது. இந்திய அணியில் பரிசோதனை முயற்சியாக 7 மாற்றங்கள் செய்யப்பட்டன. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் கண்ட இந்தியா 47–வது நிமிடத்தில் கோல் போட்டது. நியூசிலாந்து கோல் கீப்பர் அடித்த பந்து, இந்திய கேப்டன் சுனில் சேத்ரியின் காலில் பட்டு கோலுக்குள் திரும்பியது. ஆனால் இந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. 49–வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ஆந்த்ரே ஜோங் பதில் கோல் திருப்பினார்.

ஷாட்டுகள் அடிப்பதிலும், பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் (60 சதவீதம்) நியூசிலாந்தின் கையே ஓங்கி இருந்தது. 86–வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் மோசஸ் டையர் கோல் அடிக்க, அந்த அணி 2–1 என்ற கோல் கணக்கில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் தற்போது தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலையில் உள்ளன. என்றாலும் கோல் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ள இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு கிடைப்பது உறுதி. இன்று நடக்கும் கடைசி லீக்கில் கென்யா– சீனதைபே அணிகள் சந்திக்கின்றன. இதில் 3 புள்ளியுடன் உள்ள கென்யா அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இல்லாவிட்டால் நியூசிலாந்து அணிக்கு இறுதி சுற்று வாய்ப்பு கிடைக்கும்.

Leave a comment

Your email address will not be published.