சிஎஸ்கே-யால் ஒருபோதும் காவிரி நீரைக் கொண்டு வர முடியாது கோப்பையைக் கொண்டு வர முடியும்: வெற்றி விழாவில் தோனி பேசியது

2018 ஐபிஎல் டி20 சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கள் சாம்பியன்ஷிப் வெற்றியை சென்னையில் கொண்டாடினர். அதில் தோனி மிகவும் உற்சாகமாகப் பல விஷயங்களைப் பற்றி பேசினார்.

அப்போது “அடுத்த ஆண்டு சென்னையில் வென்ற கோப்பையை மீண்டும் தக்கவைப்போம் என்று நம்புகிறேன். விஷயம் என்னவெனில் சிஎஸ்கேவினால் ஒரு போதும் காவிரியை இங்கு கொண்டு வர முடியாது. ஆம் வழியேயில்லை.

ஆனாலும் நாங்கள் குறிவைக்கப்பட்டோம், நியாயமானதுதான், இப்படி எப்போதும் நடக்கக் கூடியதுதான். ஆனால் நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் வெல்ல முடிந்தது, அதைச் செய்ததற்காக மகிழ்ச்சியடைகிறோம். அதனால்தான் கோப்பையை மீண்டும் சென்னைக்கே கொண்டு வந்து விட்டோம்.

அடுத்த ஆண்டும் ஐபிஎல்-ல் கோப்பைக்காக அணிகள் மோதும், நாங்கள் அவர்களுக்குத் தயாராக இருக்கிறோம். எது சிறந்த அணியோ அது வெல்லும்” என்று தன் நீண்ட உரையில் தெரிவித்திருந்தார்.

 

காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டிகள் சென்னையிலிருந்து புனேவுக்கு மாற்றப்பட்டன. இதனால் கடும் சர்ச்சைகள் எழுந்தன, வாதங்கள் எழுந்தன. ஐபிஎல் போட்டிகளை இங்கிருந்து அகற்றிவிட்டால் காவிரி நீர் கிடைக்குமா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. போராட்டத்தரப்பிலிருந்து விவசாயிகள் பிரச்சினை மையப்படுத்தப்பட்டன. விவசாயிகளுக்கு காவிரி நீர் மறுக்கப்படும்போது ஐபிஎல் கிரிக்கெட் நடத்தலாமா? என்ற கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்பட்டன.

ஐபிஎல் போட்டிகள் முக்கியமா, காவிரி பிரச்சினை முக்கியமா என்ற விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் தோனி வெற்றி விழாவில் நாங்கள் குறிவைக்கப்பட்டோம், எங்களால் ஒரு போதும் காவிரியைக் கொண்டு வர முடியாது கோப்பையைத்தான் கொண்டு வர முடியும் என்று சமத்கார தொனியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.