அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது வடகொரியாவின் அணுஆயுதங்களை முழுமையாக ஒழிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சிங்கப்பூரில் நேற்று நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்துப் பேசினர். அப்போது அணு ஆயுதங்களை ஒழிக்க வட கொரியா உறுதி அளித்தது. இதுதொடர்பான அமைதி ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் அதிபர்களும் கையெழுத்திட்டனர்.
ஜப்பான் ஆட்சியின் கீழ் இருந்த கொரிய தீபகற்பம் இரண்டாம் உலகப் போரின் போது மீட்கப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா இடையேயான பனிப்போர் காரணமாக கொரியா இரண்டாகப் பிரிந்தது. ரஷ்யாவின் ஆதரவுடன் வடகொரிய அதிபராக கிம் இல் சங் பதவியேற்றார். அமெரிக்காவின் ஆதரவு பெற்ற தென்கொரியாவில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின் 1950 முதல் 1953 வரை வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே போர் நடைபெற்றது. இந்த போர் தற்காலிகமாக முடிந்தாலும் பதற்றம் தொடர்ந்தது. கடந்த 1994 ஜூலை 8-ம் தேதி வடகொரிய அதிபர் கிம் இல் சங் காலமானார். அவரது மகன் கிம் ஜாங்-இல் அதிபராக பதவியேற்றார். 2011 டிசம்பரில் அவர் உயிரிழந்தார். அதன்பின் கிம் ஜாங் இல்லின் இரண்டாவது மனைவியின் மகன் கிம் ஜாங் உன் வடகொரியாவின் புதிய அதிபராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு அணு ஆயுத, ஏவுகணை சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் கொரிய தீபகற்பத்தை மீண்டும் போர் மேகம் சூழ்ந்தது. எந்நேரமும் அணு ஆயுத போர் வெடிக்கும் என்று அஞ்சப்பட்டது.
திடீர் திருப்பமாக தென்கொரியாவின் அழைப்பை ஏற்று கடந்த பிப்ரவரியில் சியோலில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றது.
அதன்பின் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்துப் பேசினர். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க அதிபர் கிம் விருப்பம் தெரிவித்தார். இதனை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார். சில குழப்பங்களுக்குப் பிறகு இரு தலைவர்களும் சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது.
அமைதி ஒப்பந்தம்
இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம்மும் கடந்த 10-ம் தேதி சிங்கப்பூர் சென்றனர். தனித்தனி ஹோட்டல்களில் தங்கியிருந்த அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நேற்று சந்தித்தனர். இருவரும் தனிப்பட்ட முறையில் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரண்டாம் கட்டமாக இருதரப்பு மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன்பின் ட்ரம்பும் கிம்மும் நிருபர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் வருமாறு:
கொரிய தீபகற்பத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நீடித்திருக்க இருநாடுகளும் இணைந்து செயல்படும். அமெரிக்க தரப்பில் வடகொரியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியா உறுதியளிக்கிறது. இவ்வாறு அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்ப் புகழாரம்
இரு அதிபர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: அதிபர் கிம் புத்திசாலி. தனது நாட்டின் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார். அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட அதிபர் கிம் உறுதியளித்துள்ளார். வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிட்டு வர்த்தக பாதைக்கு திரும்பினால் அந்த நாட்டின் சாதனைக்கு எல்லை இல்லை.
நேற்றைய மோதல் நாளைய போராக மாற வேண்டிய அவசியமில்லை. வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். தற்போதைய நிலையில் அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படாது. அமெரிக்கா வருமாறு அதிபர் கிம்முக்கு முறைப்படி அழைப்பு விடுப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கிம் ஜாங் உன் நன்றி
அதிபர் கிம் ஜாங் உன் கூறியபோது, “இந்த சந்திப்பு நினைத்தவுடன் நடைபெறவில்லை. பழைய சம்பவங்கள் பல்வேறு தடைகளை ஏற்படுத்தின. அவற்றை தாண்டி சந்திப்பு நடைபெற்றுள்ளது. பழையவைகளை மறந்துவிட வேண்டிய தருணம் இது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நிகழ காரணமாக இருந்த அதிபர் ட்ரம்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவுடனான உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளோம். இனிமேல் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து இனிமேல் போர் ஒத்திகையில் ஈடுபடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி அளித்தார். எனினும் தென்கொரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க படை கள் வாபஸ் பெறப்பட மாட்டாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா வரவேற்பு
இந்திய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனை வரவேற்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, வடகொரியா இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை தென்கொரியா, ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
1 comment