சிப்ரி ஆய்வில் தகவல் இந்தியாவை விட பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் அதிகம்

லண்டன்: இந்தியாவை விட பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் அதிகம் என்று சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆய்வு நிறுவனம் (சிப்ரி) தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களை தடை செய்யக்கோரி ஐ.நா.வில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 122 நாடுகள் ஆதரவளித்தன. ஆனால் அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், சீனா தன்னுடைய அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருவதாகவும் சிறிது சிறிதாக தன்னுடைய அணு ஆயுதக் கிடங்கை விரிவுப்படுத்தி வருவதாகவும் சுவீடனை சேர்ந்த சிப்ரி நிறுவனத்தின் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்ந்து தங்களது அணு ஆயுதங்களை அதிகரித்து வருகின்றன. நிலம், நீர் மற்றும் வான்வழி ஏவுகணைகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. மொத்த அணு ஆயுதங்களில் 92 சதவிகிதம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளில் மொத்தமாக 14,465 அணு ஆயுதங்கள் இருந்தன. இதில் 3,750 ஆயுதங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் 14,935 அணு ஆயுதங்கள் இருந்து, பின்னர் அவற்றில் ஆயுதக்குறைப்பு நடவடிக்கையின் கீழ் சில நாடுகளால் குறைக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 300 அணு ஆயுதங்களும், சீனாவில் 280 அணு ஆயுதங்களும், பிரிட்டனில் 215 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானில் 140 முதல் 150 அணு ஆயுதங்களும் இந்தியாவில் 130 முதல் 140 வரையிலும், இஸ்ரேலில் 80 மற்றும் வடகொரியாவில் 10 முதல் 20 அணு ஆயுதங்களும் உள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் பாகிஸ்தானில் இந்த ஆண்டு 10 அணு ஆயுதங்கள் அதிகரித்துள்ளது.  இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் அதிகம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.