சிரியாவில் ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 25 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்படும் சிரிய கண்காணிப்பு குழு கூறும்போது, “சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ரஷ்யப் படைகள் சிரியாவின் தென் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் வியாழக்கிழமை ரஷ்யப் படைகள் அல் செஃப்ரா பகுதியில் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 25 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர்” என்று கூறியுள்ளது.
ஆனால் இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. அதிபர் ஆசாத்துக்கு உதவியாக ரஷ்யப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.