பாரீஸ் : பிரான்ஸ் சிறையிலிருந்த கொள்ளைக் கும்பல் தலைவரை ஹெலிகாப்டரில் வந்த கும்பல் மீட்டுச்சென்றது.
பிரான்சில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நபர் ரெடோயின் பாயித், 46. 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பாரீஸ் புறநகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று இயந்திரத் துப்பாக்கிகளுடன் ஹெலிகாப்டரில் பாயிதின் ஆதரவாளர்கள் சிறை வளாகத்தில் வந்து இறங்கினர்.
சிறை அதிகாரிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பாயிதைக் காப்பாற்றி ஹெலிகாப்டரில் அழைத்துச்சென்றனர். தகவலறிந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தப்பிச் சென்ற ஹெலிகாப்டர் புறநகர் பகுதியில் கண்டறியப்பட்டது. ஆனால் அனைவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த ஹெலிகாப்டரும் திருடப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே தப்பியவர்: ஏற்கனவே 2013-ஆம் ஆண்டில் சிறைக் கதவுகளை வெடிவைத்துத் தகர்த்து பாயித் தப்பிச் சென்றுள்ளார். 6 வாரங்களுக்குப் பிறகு அவரை போலீஸார் மீண்டும் கைது செய்தனர். தற்போது, ஹாலிவுட் திரைப்பட பாணியில் ஹெலிகாப்டர் மூலம் அவர் மீண்டும் தப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.