சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கும்விதமாக இந்தியாவில் சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கையை எடுத்துவருகிறது. சோலார் மின் உற்பத்தி தயாரிப்பாளர்களுக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கிவருகிறது. இதன்காரணமாக சோலார் மின்சக்தி உற்பத்தியில் விழிப்புணர்வு பெருகிவருவதால் சோலார் பேனல்களுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்துவருகிறது.
இதற்கான உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியாவில் பல்வேறு சிறு, குறு, பெருநிறுவனங்கள் ஈடுபட்டுவரும் வேளையில், சீனா மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, தைவான் போன்ற நாடுகள் குறைந்த விலையில் சோலார் செல்களை இந்தியாவில் இறக்குமதி செய்து இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன. இறக்குமதியாளர்களின் சோலார் உபகரணங்களால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக இந்திய சோலார் உற்பத்தியாளர்கள் சங்கம் இந்திய அரசிடம் புகாரளித்து இருந்தது. மேலும், வர்த்தகத் தீர்வுகளுக்கான பொது இயக்ககம் (DGTR) அமைப்பானது சீனா மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் சோலார் செல்களுக்கு வரி விதிக்க பரிந்துரை செய்திருந்தது.