சுய தொழில் தொடங்க விருப்பமா?

q5

நம் மன உறுதியையும் ஆற்றலையும் சோதித்து நம்மைச் ​சிறந்த மனிதனாக ​மெருகேற்றவல்லது தொழில். மிகப்பெரிய சமுத்திரத்தில் சிறிய மீனாக இருப்பதைவிட, சின்னஞ்சிறிய குளமானாலும் பெரிய மீனாகத் தனித்து நின்று செயலாற்றுவது என்றும் சிறப்புதான் இல்லையா. நம்மை நாம் ஒரு ‘தொழில் முனைவோர்’ எனப் பிறரிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது, சமுதாயத்தில் நமக்கென ஒரு தனி அடையாளமும் அங்கீகாரமும் கிடைப்பதென்னவோ உண்மைதான்.

​​விவசாயம், தொழிற்சாலை மற்றும் உற்பத்தி, இயந்திர மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, போக்குவரத்து, ஜவுளித்துறை, மின்னணு, தோல்துறை, ஆற்றல் – அணு, நீர், சூரியசக்தி போன்ற முக்கியத் துறைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றன. மேலும், வளர்ந்துவரும் நாகரிகத்துக்கு ஏற்ப, புகைப்படம்,​ அழகுத்துறை,​ இவென்ட் மேனேஜ்மென்ட்,​  கணினி வடிவமைப்பு போன்ற துறைகளும் கலை, அறிவியல் மற்றும் விளையாட்டுத்துறையும்கூட தொழில் வாய்ப்புகளை அள்ளித்தருகின்றன.​ அதுமட்டுமா.​ அத்தியாவசிய மற்றும் அன்றாடத் தேவைகளுக்காக நாம் உபயோகிக்கும் பொருள்களின் வியாபாரத்துக்கு என்றுமே தொய்வு கிடையாது எனலாம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை, சிறியதாகத் தொழில் தொடங்கி, வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்தவர்கள் ஏராளம். மேலும், இதுபோன்று சுயதொழில் செய்வோருக்கென்றே பல திட்டங்களையும் மானியங்களையும் அரசாங்கம் அறிவித்துவருகிறது. தொழில் செய்வோருக்கும் புதிய வியாபாரத்தைத் தொடங்க எண்ணமுல்லோர்க்கும் தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பிரத்தியேக வியாபாரக் கடன்களை​,​ பிற கடன்களுக்கான வட்டியைவிட குறைந்த சதவிகிதத்தில் வழங்கிவருகின்றன. சுய உதவிக் குழுக்கள், தொழில் முனைவோர் சங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களும்கூட தமிழகத்தின் தொழில் மேம்பாட்டுக்காகத் தங்களால் இயன்ற பங்களிப்பைக் கொடுத்துவருகின்றன. பல்கலைக்கழகங்களிலும் அரசால் நிர்வகிக்கப்படும் பயிற்சி நிலையங்களிலும் வணிகம் சம்பந்தப்பட்ட பட்டயப் படிப்புகளும் பயிற்சி வகுப்புகளும் வழங்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறு பலவகைத் திட்டங்களும் ஊக்கங்களுக்குமான காரணம் என்ன. தொழில் முனைவோர்தான் நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூண்கள்; பொருளாதார வளர்ச்சி என்பது இவர்கள் செய்துவரும் தொழிலின் வளர்ச்சிதான்!

பிறர் தயவை நாடாமல் தன்னுடைய உழைப்பையும் திறமையையும் மட்டும் நம்பி தனியாகத் தொழில் தொடங்குவதால், தானும் பயனடைந்துகொண்டு, பிறருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இருப்பினும், பலர் இதைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பது வருந்தக்கூடிய செய்தியாகவுள்ளது! காரணம், வியாபரத்திலுள்ள சவால்கள் மற்றும் ஆபத்துகள் குறித்த பயம் மற்றும் அறியாமை எனலாம். சிலரோ, தொழில் தொடங்க வேண்டுமென்ற முனைப்பையும் ஆசையையும் வைத்துக்கொண்டு, புதிதாகத் தொழில் தொடங்கி வாடிக்கையாளர்களிடம் பெயரைச் சம்பாதிப்பதற்கு நிறைய வருடங்கள் ஆகலாம் என்ற எண்ணத்தால், எதையும் தொடங்காமலேயே இருந்துவிடுகின்றனர்.

Leave a comment

Your email address will not be published.