சுருள் பாசி வளர்ப்பு !

சுருள் பாசி வளர்ப்பு !
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதச்சத்தினை மிக அதிகமாக கொண்டுள்ள சுருள்பாசியை (ஸ்பைருலினா) குறைந்த செலவில் வளர்த்து அதிக லாபம் பெறலாம்.

👉 சுருள் பாசியில் 15 வகைகள் உள்ளன. தமிழகச் சூழலுக்கு ஸ்பைருலினா மேக்ஸிமா ஸ்பைருலினா பிளான்டெனிஸ் ஏற்றவை. இயந்திரங்களைக் கொண்டு வளர்ப்பதற்கு மேக்ஸிமா வகை ஏற்றது. சிறு தொழில் மூலம் வளர்ப்பதற்கு பிளான்டெனிஸ் வகை ஏற்றது.

ஏற்ற தட்பவெப்பநிலை :

👉 சுருள் பாசி வளர்க்க 28 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெயில் தேவைப்படும். சுருள் பாசி வளர்க்கும் இடம் சுத்தமாக இருத்தல் வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இதை வளர்க்கக் கூடாது.

தொட்டி அமைக்கும் முறை :

👉 சுருள் பாசியை பிளாஸ்டிக் மற்றும் சிமெண்ட் தொட்டிகளில் வளர்க்க வேண்டும். தொட்டியின் நீளம் 10 அடி அகலம் 5 அடி உயரம் 1.5 அடி இருத்தல் வேண்டும். அதிக வெப்பமான காலங்களில் தொட்டியில் 23 செ.மீட்டரும் மழைக்காலங்களில் 20 செ.மீட்டரும் தண்ணீர் இருத்தல் வேண்டும். தொட்டியின் நீளம் மற்றும் அகலங்களை நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.

ஊடகம் தயாரிக்கும் முறை:

👉 பாசி வளர்வதற்காக ஒரு லிட்டர் ஊடகம் தயாரிப்பதற்கு தேவையான பொருள் சோடியம் பைகார்பனேட் 8 கிராம், சோடியம் குளோரைடு 5 கிராம், யூரியா 0.2 கிராம், பொட்டாசியம் சல்பேட் 0.5 கிராம், மெக்னீசியம் சல்பேட் 0.16 கிராம், பாஸ்பரிக் அமிலம் 0.052 மில்லி, பெரஸ் சல்பேட் 0.05 மில்லி மற்றும் ஒரு கிராம் தாய்ப்பாசியைச் சேர்க்க வேண்டும்.

👉 தினமும் பாசி அறுவடை செய்த பின்பு இந்த அளவு கலவையைச் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். தொட்டியின் மீது பாலீத்தின் கூரை அமைப்பதன் மூலம் தூசி பனிநீர் புழு பூச்சிகள் தொட்டியில் விழாமல் பாதுகாக்கலாம்.

👉 தொட்டியில் அடிக்கடி நீர் மாற்ற அவசியம் இல்லை. வெயிலின் தாக்கத்தால் நீர் ஆவியாக வாய்ப்பு உள்ளது. இதற்கு நீர் ஆவியான அளவிற்கு ஊற்ற வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு புதிதாக தாய்ப்பாசி விட வேண்டும்.

பாதுகாப்பு :

👉 தினமும் பகலில் 20 முறை தொட்டியை கலக்கிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் தொட்டி முழுவதும் ஒரே சீராக வெப்பம் இருக்கும். பாசி வளர்க்க சுத்தமான நீராக இருக்க வேண்டும். தினமும் வெயில் வருவதற்குள் பாசியினை அறுவடை செய்ய வேண்டும். நமது கையால் நீரைத் தொடக்கூடாது ஏனெனில் நமது கைகளில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் இருக்கும் அது பாசி வளர்ப்பை பாதிக்கும். சுத்தமான குச்சியை கொண்டே தொட்டியை கலக்கிவிட வேண்டும்.

அறுவடை :

👉 தினமும் காலை 6 மணி முதல் 8 மணிக்குள் பாசியினை அறுவடை செய்ய வேண்டும். வெயில் சூடு அதிகமாக அதிகமாக பாசி அறுவடை அளவு குறையும். தொட்டியில் இருக்கும் பாசியை பாசி அள்ளும் குச்சிகளால் அள்ளி இதற்கென்று தயாரிக்கப்பட்ட இரட்டைச் சல்லடை மீது ஊற்ற வேண்டும். மேற்புறம் உள்ள சல்லடையில் தூசிகள் படிந்துவிடும். அடிப்புறம் உள்ள சல்லடையில் பச்சை நிறப் பாசியானது தேங்கிவிடும்.

👉 இந்த பாசியை ஒரு மெல்லிய வலையில் வைத்து 50 கிலோ எடையுள்ள கல்லால் 1 நிமிடம் அழுத்தினால் பாசியில் உள்ள நீர் வெளியே வந்துவிடும். பிறகு இடியாப்பம் பிழியும் குழலில் இட்டு பிழிந்து வெயிலில் ஒருநாள் காயவைக்க வேண்டும். பிறகு மாவு அரைக்கும் இயந்திரத்தில் இட்டு தூள் செய்து பாக்கெட்டில் அடைத்தால் சுருள் பாசி (ஸ்பைருலினா) தயாராகிவிடும்.