டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கடந்த ஆண்டு ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து ஆண்டிபட்டி தங்க.தமிழ்செல்வன், பெரம்பூர் வி.வெற்றிவேல், சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன், தஞ்சாவூர் எம்.ரங்கசாமி, அரூர் ஆர்.முருகன், மானாமதுரை சோ.மாரியப்பன் கென்னடி, பெரியகுளம் டாக்டர் கே.கதிர்காமு, குடியாத்தம் சி.ஜெயந்தி பத்மநாபன், பாப்பிரெட்டிபட்டி பி.பழனியப்பன், அரவக்குறிச்சி வி.செந்தில்பாலாஜி, பரமக்குடி டாக்டர் எஸ்.முத்தையா, திருப்போரூர் மு.கோதண்டபாணி, பூந்தமல்லி டி.ஏ.ஏழுமலை, நிலக்கோட்டை ஆர்.தங்கதுரை, ஆம்பூர் ஆர்.பாலசுப்பிரமணி, சாத்தூர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் ஆர்.சுந்தர்ராஜ், விளாத்திகுளம் கே.உமாமகேஸ்வரி ஆகிய 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் கடந்த 2017 செப்டம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, ‘‘மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 எம்எல்ஏ-க்களின் தொகுதியை காலியாக அறிவித்து தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது’’ என இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கும் பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடந்து வந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதேபோல முதல்வர், பேரவைத் தலைவர், துணை முதல்வர், அரசு தலைமை கொறடா ஆகியோரது சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, ஆர்யமா சுந்தரம், சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் எழுத்துபூர்வமான இறுதி வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையடுத்து கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி அமர்வு இன்று (ஜூன் 14) மதியம் 1 மணிக்கு வழங்க உள்ளது.
இந்த வழக்கில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என ஒருவேளை நீதிபதிகள் தீர்ப்பு அளித்தால், அது தற்போதைய ஆட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி அணிகள் ஒன்றாக இணைந்து அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டுள்ளன. ஆனாலும் ஆட்சியைத் தக்கவைக்க பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால், ஆர்.கே.நகர் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரனோடு சேர்ந்து இந்த 18 எம்எல்ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்தால் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் சூழல் ஏற்படும்.
ஒருவேளை நீதிபதிகள் தங்களுக்குள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படும். தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தீர்ப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் எழுந்துள்ளது. அதனால், இந்த வழக்கின் தீர்ப்பை அனைத்து கட்சிகளும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளன.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேர், அரசுக்கு எதிராக வாக்களித்து இருந்தனர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத் தூஸ் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து, கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வழக்கை தள்ளுபடி செய்தது. பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.