செல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி உறவுப் பெண்ணை கண்காணித்த இளைஞர்

ராமநாதபுரத்தில் தனது உறவுக்கார பெண்ணின் செல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி அதன் மூலம் உறவுப்பெண்ணை கண்காணித்த இளைஞர் அதை வைத்து மிரட்டும்போது போலீஸிடம் சிக்கி கம்பி எண்ணுகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள தாமரை ஊரணியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(30). எம்.சி.ஏ. பட்டதாரி. கம்ப்யூட்டரின், செல்போன்களின் தற்போதைய நிலைத்தகவல்கள் அத்தனையும் அத்துப்படி.

இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தனது சகோதரி முறையுள்ள உறவுப்பெண்ணை சந்தித்துள்ளார். அவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். மனைவிக்கு புது ஆன்டராய்டு போனை அனுப்பியுள்ளார். அதை எப்படி இயக்குவது என்பது தெரியாததால் தினேஷ்குமாரை பார்த்தவுடன் சகோதரன் என்ற எண்ணத்தில் இந்தா புதுப்போன் வந்துள்ளது, அதில் வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற முக்கியமான ஆப்ஸ் எல்லாம் ஏற்றிக்கொடு என்று கூறி போனை கொடுத்துள்ளார்.

போனை வாங்கிய தினேஷ்குமார் அதில் மற்ற ஆப்ஸ்களை ஏற்றும்போதே நைசாக செல்போனை கண்காணிக்கும் ஒரு செயலியையும் ஏற்றியுள்ளார். இதை அறியாத அவரது உறவுக்கார பெண் தனது போனை பயன்படுத்தியுள்ளார். ஆனால் தினேஷ்குமார் அந்த செயலி மூலம் அவரது உறவுப்பெண்ணின் அனைத்து நடவடிக்கைகளையும் ரெக்கார்ட் செய்துள்ளார்.

அவரது கணவருடன் பேசுவது, அவரது அந்தரங்க புகைப்படம், அவரது கணவருக்கு அனுப்பிய வீடியோக்கள் அனைத்தையும் தனது லேப்டாப்பில் ஏற்றிவிட்டு அதை வைத்து அந்த பெண்ணை வேறொரு நபர் போல் மிரட்டியுள்ளார். உனது அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்கள் என்னிடம் உள்ளது என்று சில புகைப்படங்களை அனுப்பி தனக்கு இணங்கும்படி மிரட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அப்பெண் இதுகுறித்து தனது உறவினர்களிடம் கூற அவர்கள் கூறியபடி நடப்பதுபோல் நடிக்க சொல்லி அலோசனை கூறியுள்ளனர்.அவரும் அதே போல் நடக்க ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு தினேஷ் வரச்சொல்ல அங்கு அந்தப்பெண் போக பின்னாடியே ரக்சியமாக உறவினர்களும் செல்ல குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லிய நபரை சந்தித்த அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அடப்பாவி அக்கா முறைவேண்டும், உன் புத்தி ஏன் இப்படி போக வேண்டும் என்று அடித்து தேவிபட்டினம் போலீஸில் ஒப்படைத்துள்ளனர். போலீஸார் தினேஷ்குமாரைப் பிடித்து தீவிரமாக விசாரித்தபோது அவர் திடுக்கிடும் பல தகவல்களை கூறியுள்ளார்.

தினேஷ்குமார் இதுபோன்று செல்போன் செயலிகளை பற்றி தெரிந்துக்கொண்டு அதை தனக்கு தெரிந்த பெண்கள் செல்போனில் அவர்களுக்கு தெரியாமல் ஏற்றிவிடுவார், பின்னர் அவர்களது அத்தனை புகைப்படங்கள், வீடியோக்களை அவரது லாப்டாப்பில் சேகரிப்பார். பின்னர் அவர்களை மிரட்டுவார், தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொள்வார்.

ஒரு கட்டத்தில் தான் செய்வது தவறு என்ற மனநிலையையும் கடந்து தனது உறவுப் பெண்களிடம் கூட அதே மனநிலையில் பார்க்க ஆரம்பித்துள்ளார். அவர்களையும் மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். அவர் வீட்டில் லேப்டாப்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

தன்னுடைய மிரட்டலுக்கு இணங்காத பெண்களின் வீடியோக்களை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்யும் வேலையையும் செய்துள்ளார்.

தினேஷ்குமாரிடம் அதிகம் இருந்தது உறவினர்கள் தெரிந்த பெண்களின் காட்சிகள், அவர்களது அந்தரங்க உரையாடல்களே இருந்துள்ளது. இது ஒருவகை மன நோய் இவ்வித நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகம் கணிணி பயன்படுத்துபவர்களாக இருந்தால் அதில் வரும் ஆபாச பக்கங்களுக்கு இரையாகி அதேபோன்ற மன நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு வித்யாசம் தெரியாது என்பதுபோல் அனைத்து பெண்களையும் நெருங்கிய உறவுப்பெண்களையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள்.

இது எவ்வகையான மன நோய், பெண்கள் இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும், எப்படி இப்படிப்பட்ட நபர்களை கண்டறிவது என்பது குறித்த மனநல மருத்துவரின் குறிப்பை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Leave a comment

Your email address will not be published.