செஸ் விளையாட கற்றுக்கொடுத்த பெற்றோர்! – தேசிய அளவில் சாதித்த 4 வயது சிறுமி

சான்வி அகர்வால் என்ற நான்கு வயது சிறுமி, பெண் குழந்தைகளுக்கான தேசிய செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். ஐந்து வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

செஸ்

அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் சார்பில்,  கர்நாடகா சதுரங்க சங்கம், 7 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான 32-வது தேசிய ஓபன் செஸ் போட்டியை எடுத்து நடத்தியது. கர்நாடக மாநிலம்  தும்கூரில் கடந்த 16-ம் தேதி தொடங்கிய இந்தப்போட்டி 9 நாள்கள் நடைபெற்றது. இதில், பல மாநிலங்களில் இருந்து வந்த குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில், 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில், சண்டிகரை சேர்ந்த சான்வி அகர்வால் என்ற சிறுமி கலந்து கொண்டார். இந்தத் தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சான்வி, இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இது, இவர் பங்கேற்ற முதல் தேசிய செஸ்போட்டியாகும். முதல் முயற்சியிலேயே இரண்டாம் இடத்தை தட்டிச் சென்று சான்வி சாதனைப் படைத்துள்ளார்.

சான்வி

இதற்கு முன்பு, 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சண்டிகர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடினார். இந்நிலையில், தேசியப் போட்டியில் வெற்றி பெற்றதால், 2019-ம் ஆண்டில் நடக்க உள்ள ஏசியன் யூத் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதுகுறித்து சான்வி கூறுகையில், `என் பெற்றோர்கள் செஸ் எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர். கம்ப்யூட்டர் மூலம் விளையாட பயிற்சியும் அளித்தனர். பயிற்சியை அடுத்து செஸ் விளையாட நன்கு கற்றுக் கொண்டேன்’ என்றார் மகிழ்ச்சியாக.

Leave a comment

Your email address will not be published.