சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு

சேலம் அருகே 8 வழி பசுமை சாலைக்கு நில அளவீடு செய்யும் பணி நேற்று 2-வது நாளாக நடந்தது. போலீசார் குவிக்கப்பட்டனர்.
சேலம்,
சேலம்-சென்னை இடையே சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக புதிதாக 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்தப்படும் பகுதியில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 24 கிராமங்களில் சாலை திட்டத்திற்கு நில அளவீடு செய்து எல்லைக்கல் ஊன்றும் பணியை தொடங்க உத்தரவிடப்பட்டது.
2-வது நாளாக நேற்று காலை சேலம் அருகேயுள்ள ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்தில் நில அளவீடு செய்யும் பணியில் நில எடுப்பு தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் 3 குழுக்களாக ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே இந்த சாலைக்காக சேலம் மாநகராட்சி உதவி பொறியாளர் கலைவாணியின் விவசாய நிலத்தில் நேற்று கூடுதலாக 20 மீட்டர் அளவீடு செய்து 4 ஏக்கர் வரை கையகப்படுத்த இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவர் அப்பகுதி விவசாயிகளுடன் அங்கு வந்து நிலம் எடுப்பு தாசில்தார் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவர் கண்ணீர் மல்க கூறும்போது, “இங்கு 3 தலைமுறையாக நாங்கள் வாழ்ந்து வரும் இடத்தில் திடீரென சாலை அமைப்பது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. விஷத்தை வேண்டுமானாலும் கொடுங்கள், குடித்து விட்டு படுத்து கொள்கிறோம். எங்கள் மீது சாலைகளை போடுங்கள். நீங்கள் சரியாக அளவீடு செய்யவில்லை. நியாயமான அளவீடு செய்து சாலையை போடுங்கள்” என்றார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தாசில்தார் வெங்கடேசன் கூறுகையில், ‘இது முதற்கட்ட ஆய்வு தான். நிலம் எடுப்பின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்கப்படும். மாட்டு கொட்டகையை மாற்றுவதாக இருந்தால் கூட அதற்கான இழப்பீடு தரப்படும். அடுத்த மாதம்(ஜூலை) 10-ந் தேதி இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது நீங்கள் உங்கள் கோரிக்கை குறித்து முறையிடலாம்’ என்றார்.
அப்போது கலைவாணி குறுக்கிட்டு, ‘உங்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்து வேலையை விட்டு விடு என்றால் விட்டுவிடுவீர்களா?’ என்று அதிகாரிகளை பார்த்து கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் இரண்டாம் ஆண்டு படித்து வரும் வளர்மதியும்(வயது 22) இந்த போராட்டத்தில் குதித்தார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெயில் மற்றும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்களிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தற்காக மாவோயிஸ்டு ஆதரவாளர் எனக் கூறி கைதானவர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் நேற்று நில அளவீடு பணி நடக்கும் இடத்திற்கு வந்த அவர் கூடியிருந்த பொதுமக்களிடம் பேசுகையில், ‘பசுமை சாலைக்கு எதிராக பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். வாய்திறந்து பேசினாலே கைது என்ற நிலையை ஏற்படுத்தி பயமுறுத்துகின்றனர்’ என்றார்.
அங்கு வந்த போலீசார், ‘உங்களுக்கு இங்கு நிலம் உள்ளதா? தேவையில்லாமல் ஏன் போராட்டத்தை தூண்டுகிறீர்கள்?’ எனக்கேட்டனர். அதற்கு அவர், ‘பொதுமக்கள் என்னை அழைத்தார்கள், அதனால் வந்தேன்’ என்று கூறினார். அப்போது போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அவர் அங்கிருந்த பொதுமக்களை பிடித்து கொண்டார். போலீசார் ஒரு பக்கம் இழுக்க, பொதுமக்கள் ஒரு பக்கம் அவரை இழுக்க அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பெண் போலீசார் வளர்மதியை கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்து போலீஸ் வேனில் ஏற்றினர். பின்னர் அவர் அங்கிருந்து சேலம் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு நில அளவீடு பணி தொடர்ந்து நடந்தது.
மாணவி வளர்மதி கைது சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a comment

Your email address will not be published.