சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், போலீஸார் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த மே மாதம் சேலம் வந்த நடிகர் மன்சூர் அலிகான், சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, கடந்த வாரம் சேலம் தீவட்டிப்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மன்சூர் அலிகானுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு அவதிக்குள்ளானார். சிறை மருத்துவர்கள் அவரை, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைத்தனர். இதையடுத்து, போலீஸார் நேற்று காலை, மன்சூர் அலிகானை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு மன்சூர் அலிகான் அழைத்துச் செல்லப்பட்டார்.
சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்த மாணவி வளர்மதி, ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, போலீஸாரால் கைது செய்யப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய அவர், ‘போலீஸார் நம்மை தாக்கினால், திருப்பி தாக்குவோம்’ என கூறியதால் வடபழனி போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் பிடி ஆணை பெற்ற போலீஸார், நேற்று காலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வளர்மதியை கைது செய்து அதற்கான உத்தரவை வழங்கினர்.