ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: ஜம்மு காஷ்மீர் மக்களுடைய ஒப்புதலைப் பெறாமல், சட்டப்பிரிவு 370-ஐ பயன்படுத்தி ஒரு ஜனநாயகப் படுகொலையை மத்திய பாஜக அரசு அரங்கேற்றி உள்ளது.
மாநில அந்தஸ்தில் இருந்து லடாக், ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்துக்கு விரோதமாக அமைந்திருக்கிறது.
இப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலைக்கு அதிமுகவும் துணை போயிருப்பது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமையும் வரையில் குடியரசுத் தலைவருடைய இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்.
கே.எஸ்.அழகிரி: பிரதமர் நேரு கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் காஷ்மீர் மாநில மக்களின் ஆதரவை திரட்டி, இந்தியாவோடு இணைப்பதில் பெரும் துணையாக இருந்தவர் ஷேக் அப்துல்லா. அப்படி இணைகிறபோது வழங்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் அரசமைப்பு சட்டத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்குகிற 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. இதன் மூலம் ஜனநாயகப் படுகொலையை பாஜக செய்திருக்கிறது. இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு நாள். பாஜகவின் வகுப்புவாத நடவடிக்கைக்கு அதிமுக துணைபோயிருப்பதை எவரும் மன்னிக்க மாட்டார்கள்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சாசனப் பிரிவு 370-இன் படி வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதும், அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் ஜனநாயகப் படுகொலையாகும்.
மாநில உரிமைகள், கூட்டாட்சித் தத்துவம், இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாப்பதில் அக்கறை கொண்ட அனைவரும் மத்திய பாஜக அரசின் இந்தக் கொடூரத் தாக்குதலை எதிர்த்து போராடி முறியடிக்க வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், அரசியல் தீர்வுக் காண வழிமுறைகள் உருவாக்கப்படாமல், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை பிரித்திருப்பது நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
மத்திய அரசின் ஜனநாயக விரோத, மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்களை மதச்சார்பற்ற, ஜனநாயக, தேசபக்த சக்திகள் ஒருங்கிணைந்து தடுத்து நிறுத்த தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.
பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி): காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வழங்கிய 370 – வது அரசியல் சட்டப் பிரிவை நீக்குவதாக இந்திய அரசு செய்துள்ள முடிவு காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்டும் நம்பிக்கை துரோகமாகும். பாகிஸ்தான் கூறிய வாக்குறுதிகளை ஏற்காமல் இந்தியாவுடன் இணைவது என காஷ்மீர் மக்கள் முடிவு செய்தபோது அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் சிறப்புத் தகுதி வழங்கப்பட்டது.
இந்திய அரசின் ஆளும் கட்சிகள் மாறலாம். ஆனால் அரசு அளித்த வாக்குறுதி நிலையானது. அதை மீறுவது காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
கமல்ஹாசன் (மநீம): 370 மற்றும் 35 ஏ ஆகிய அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல். ஜனநாயகத்தில் எதிர்குரல்களை முடக்கும் பாஜக அரசின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதிமையம் கண்டிக்கிறது. சென்ற முறை பண மதிப்பிழப்பு. இந்த முறை 370 -ஆவது அரசியல் சட்டப்பிரிவு நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும், பிற்போக்குத்தன்மையும் கொண்ட செயல்களாகவே பாஜக அரசு மேற்கொள்கிறது.
ஜவாஹிருல்லா (மமக): ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைக்கு எதிராக பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வந்ததோடு, தற்போது 370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்துள்ளது. இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே பாஜக அரசின் இந்த செயல்பாடு அமைந்துள்ளது.
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): ஜம்மு – காஷ்மீருக்கான தனி அதிகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த ஜனநாயகப் படுகொலை தமிழகத்துக்கும் ஏற்பட வெகுகாலம் ஆகாது என எச்சரிக்கிறேன்.
எம்.ஜி.கே.நிஜாமுதீன் (தேசிய லீக்): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு ரத்து செய்திருப்பதும், அதை அதிமுக போன்ற கட்சிகள் ஆதரித்திருப்பதும் கண்டனத்துக்குரியது. சிறப்பு அந்தஸ்தை நீக்குவதால் நாட்டுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது எனத் தெரியவில்லை. இந்தச் செயலின் மூலம் காஷ்மீர் பிரச்னையை பாஜக உலக பிரச்னையாக மாற்றியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
இல.கணேசன்: மறைந்த முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியில் இருந்தபோது மக்கள் கருத்துக்கு மாறாக அப்போதைய காஷ்மீர் மகாராஜா கையொப்பம் இட்டு இந்தியாவோடு காஷ்மீரை இணைத்துக் கொண்ட பிறகும் வேண்டுமென்றே தன் நண்பருக்காக, அவருடைய கோரிக்கைகள் அனைத்தையும் அமல்படுத்தும் வகையில் சட்டப்பிரிவு 370 சேர்க்கப்பட்டது. இது எந்த வகையில் வந்ததோ அதே வகையில் தீர்த்தால் நல்லதுதான் என்பது என்னுடைய கருத்து. காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டுமென்று முடிவெடுத்து துணிந்து செயல்படும் கட்சி என்றால் அது பாஜக மட்டும்தான். இதுபோல இன்னும் பல சிறந்த முடிவுகளை பாஜக எடுக்கும் என்றார்.
தமிழிசை சௌந்தரராஜன்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், காஷ்மீரும், இந்தியாவின் ஒரு பகுதியே என்பது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை இருந்த சிறப்பு அந்தஸ்து காஷ்மீர் மக்களுக்கான உரிமையைப் பறிப்பதாகத்தான் இருந்தது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தடுக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதி மக்களின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் வசிக்கும் மக்களும் இந்திய நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்களைப் போல அனைத்துத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகளை அனுபவிக்கும் அளவுக்கு இன்று ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஜி.கே.வாசன்: ஜம்மு – காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டிருந்த தனி அதிகாரம் இன்று விலக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொழிற்சாலைகள் பெருகும், தொழில் முனைவோர் ஜம்மு – காஷ்மீர் லடாக்கில் மூலதனம் செய்வர். வேலைவாய்ப்புகள் பெருகும். இந்தியாவில் மற்ற மாநிலங்களைப் போல ஜம்மு- காஷ்மீர், லடாக் வளர்ச்சிபெறும். இதன் மூலம் தீவிரவாதத்துக்கு ஒரு முடிவு வரும் எனக் கூறியுள்ளார்.