ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த வரி குறைப்பு மட்டுமே சிறந்த தீர்வு

* மத்திய அரசுக்கு அசோசெம் யோசனை
* வரியால்தான் விலை உயர்கிறது என குற்றச்சாட்டு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வரியை குறைப்பதே சிறந்த தீர்வு என அசோசெம் தெரிவித்துள்ளது.இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (அசோசெம்) பொது செயலாளர் டி.எஸ்.ராவத் விடுத்துள்ள அறிக்கை: பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த  அதன் மீதான வரிகளை குறைப்பது சிறந்த தீர்வாக இருக்கும். அதோடு, நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்து ஏற்றுமதியில் பிற நாடுகளுடன் போட்டியிடுவதற்கு உதவும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு  பொருளாதாரத்துக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இதனால் விலைவாசியும் உயர்கிறது. இது பண வீக்கத்துக்கு காரணமாக அமையும்.

பெட்ரோல், டீசல் விலையில் வரிகள்தான் பிரதானமாக இருக்கின்றன. ஒரு லிட்டர் கச்சா எண்ணெயை 26க்கு எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல்  செய்கின்றன இதில் நுழைவு வரி, சுத்திகரிப்பு, லாபம், டீலர் கமிஷன் சேர்த்து லிட்டருக்கு ₹30 ரூபாய் உயர்கிறது. அதன்பிறகு மத்திய அரசு கலால்  வரியாக லிட்டருக்கு 19 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, மாநில  வாட் வரிகளும் சேர்கின்றன. வரிகளால் மட்டும் 130 % விலை உயர்கிறது என கூறப்பட்டுள்ளது.

வரிகளால் மட்டும் 4 லட்சம் கோடி அரசுகளுக்கு வருவாய்
2013ம் ஆண்டு கலால் வரி ஒரு லிட்டருக்கு 9 ரூபாயாக இருந்தது. அப்போது கச்சா எண்ணெய் ஒரு பேரல் 110 டாலர். இன்று கச்சா எண்ணெய் விலை  குறைவாக இருந்தும், கலால் வரியாக பெட்ரோலுக்கு 19, டீசலுக்கு 15 வசூலிக்கப்படுகிறது. 2014 நவம்பரில் இருந்து 2016 ஜனவரி வரை 9 முறை கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் வரிகளில்  பெரும்பகுதியை வருவாயாக ஈட்டியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு வரிகளால் அதிக லாபம் கிடைக்கிறது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகள் மூலம் 2016-17 நிதியாண்டில் மத்திய  அரசு 2.4 லட்சம் கோடியும், மாநிலங்கள் 1.6 லட்சம் கோடியும் வருவாய் ஈட்டியுள்ளன என அசோசெம் சுட்டிக்காட்டியுள்ளது.

உயர்ந்தது 4 குறைத்தது 1
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,  டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. கர்நாடக தேர்தலுக்காக 19 நாட்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்த நிறுவனங்கள், கடந்த மாதம் 14ம் தேதி மதல் 29ம் தேதி வரை  பெட்ரோலுக்கு சென்னையில் ₹4, டெல்லியில் ₹3.80 உயர்த்தின. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக விலை குறைந்து வருகிறது. முதல் நாள் ஒரு  ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டது. 10 நாட்களில் பெட்ரோலுக்கு சென்னையில் ₹1.06, டெல்லியில் ₹1 குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல் டீசலுக்கு சென்னையில் 3.62, டெல்லியில் 3.38 உயர்த்தப்பட்டது. இதில் கடந்த 10 நாளில் சென்னையில் ₹78 காசு, டெல்லியில் 72  காசு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.