ஜியோபோனில் பிரபல கூகுள் அம்சங்கள்

ஜியோபோனில் பிரபல கூகுள் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதனால் ஜியோபோன் பயன்படுத்துவோர் விரைவில் கூகுள் சேவைகளை பயன்படுத்த முடியும்.

ரிலையன்ஸ் ஜியோவின் ஃபீச்சர்போனான ஜியோபோன் விரைவில் பிரபல கூகுள் சேவைகளான கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் மேப்ஸ், யூடியூப் மற்றும் கூகுள் சர்ச் உள்ளிட்டவை பெற இருக்கிறது.
ஜியோபோன் கைஓஎஸ் (KaiOS) இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. அமெரிக்காவை சேர்ந்த கைஓஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஜியோபோனுக்கான இயங்குதளத்தை வழங்குகிறது. அந்த வகையில் கைஓஎஸ் நிறுவனம் கூகுளுடன் இணைந்து பிரபல கூகுள் சேவைகளை கைஓஎஸ் பயனர்களுக்கு வழங்க இருக்கின்றது.
கூகுள் நிறுவனம் கைஓஎஸ் நிறுவனத்தில் சுமார் 2.2 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இது அடுத்த தலைமுறை பயனர்களிடம் இன்டர்நெட் வசதியை கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும்.
“இந்த முதலீடை பயன்படுத்தி கைஓஎஸ் இயங்குதளத்தை வேகமாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதோடு, உலகின் மற்ற சந்தைகளிலும் வெளியிட்டு ஸ்மார்ட் ஃபீச்சர் போன்களின் மூலம் இதுவரை இணையம் பயன்படுத்தாதோருக்கு இன்டர்நெட் வசதியை கொண்டு சேர்க்க முடியும்,” என கைஓஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரியான செபஸ்டியன் கோட்வில் தெரிவித்திருக்கிறார்.
கைஓஎஸ் இயங்குதளம் இணையம் சார்ந்த தளம் ஆகும். இந்த இயங்குதளம் ஹெச்.டி.எம்.எல்.5 (HTML5), ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) மற்றும் சி.எஸ்.எஸ். (CSS) ஓபன் ஸ்டான்டர்டுகளை பயன்படுத்துகிறது. இந்தியாவில் 2018 ஜனவரி மாத வாக்கில் வெளியிட்டப்பட்ட நிலையில், இந்த இயங்குதளம் மொபைல் ஓஎஸ் சந்தையில் 15% பங்குகளை பெற்றிருக்கிறது.
டிவைஸ் அட்லஸ் வெளியிட்டிருக்கும் சமீபத்திய மொபைல் வெப் இன்டலிஜென்ஸ் ஆய்வு அறிக்கையின் படி கைஓஎஸ் இயங்குதளம் இந்தியாவில் ஆப்பிள் ஐஓஎஸ்-ஐ பின்னுக்குத்தள்ளி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொபைல் போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக ஆன்ட்ராய்டு இருக்கிறது.
 

 
ஜியோபோன் சிறப்பம்சங்கள்:
– 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே
– டூயல் கோர் பிராசஸர்
– 512 எம்பி ரேம்
– 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 2 எம்பி பிரைமரி கேமரா
– 0.3 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ
– 2000 எம்ஏஹெச் பேட்டரி
வாய்ஸ் கமான்ட் வசதி கொண்ட ஜியோபோனில் 22 இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும். இத்துடன் இந்த மொபைலில் ஜியோ செயலிகள் ஏற்கனவே பிரீஇன்ஸ்டால் செய்யப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.