ஜி.எஸ்.டி (GST) கவுன்சிலின் 28-வது கூட்டத்தில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் மீதான ஜி.எஸ்.டி வரியைக் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஃபிரிட்ஜ் முதல் வாஷிங் மெஷின் வரை 88 பொருள்கள் விலை குறைப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், பல்வேறு சமூக நல அமைப்பினர் கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று சானிடரி நாப்கின் மீதான ஜி.எஸ்.டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வரிக் குறைப்பு கண் துடைப்பு நாடகம் என்று வணிகர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியோ இது தேர்தலைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனச் சாடியுள்ளது.
`ஒரே நாடு ஒரே வரி’ என்ற கொள்கையின் அடிப்படையில், ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பு முறையினால் சில குழப்பங்களும் பாதிப்புகளும் ஏற்பட்ட நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஜி.எஸ்.டி கவுன்சிலின் 28-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்விலிருந்து வருவதால், நிதியமைச்சகப் பொறுப்பைக் கவனித்து வரும் பியூஸ் கோயல் தலைமையில் , கடந்த 21-ம் தேதியன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் மீதான ஜி.எஸ்.டி வரியைக் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
வரி விலக்குப் பெறும் பொருள்கள்
குறிப்பாக, இதுவரை 12 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டிருந்த சானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புனித ஸ்தலங்களுக்காகச் செய்யப்படும் மார்பிள், மரங்கள், கற்கள், எந்தவிதமான விலைஉயர்ந்த கற்கள் இல்லாமல் செய்யப்படும் ராக்கிக் கயிறு, துடைப்பத்துக்கான மூலப்பொருள்கள், இலையால் உருவாக்கப்படும் தட்டுகள், செறிவூட்டப்பட்ட பால், முக்கியமான நினைவு நாளில் ரிசர்வ் வங்கி வெளியிடும் காசுகள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 % ஆக வரி குறைக்கப்பட்டவை
கைத்தறிகள், விவசாயத்துக்கான பாஸ்பரிக் ஆசிட் ஆகியவற்றுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், எத்தனாலுக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவிகித வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் யூரியாவுக்கும் 5 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் படிக்கப்படும் இ-புக் வரி, 18 லிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனையில், 1000 ரூபாய்க்கு மிகாத விற்பனை விலைகொண்ட பின்னல் வேலைப்பாடு கொண்ட தொப்பிக்கான வரியும் 12- லிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 வரை மதிப்புள்ள காலணிகளின் மீதான வரியும் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கையால் தயாரிக்கப்படும் தரை விரிப்புகள் மற்றும் இதரத் தரை விரிப்பான்களுக்கான வரியும் 12 லிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது.
மேலும், கையால் தயாரிக்கப்படும் சரிகை, கையால் நெய்யப்படும் திரைச்சீலைகள், கையால் செய்யப்படும் அலங்கார ஜடைகள் மற்றும் வாசலில் தொங்கவிடப்படும் துணியால் நெய்யப்படும் அலங்கார மாலை ஆகியவற்றுக்கான வரியும் 12 லிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது.
செருப்புகளுக்கு ரூ.500 முதல் வரி விதிக்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.1000 முதல் 5 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.
12% ஆக வரிக் குறைக்கப்பட்டவை
தரைகளில் பதிக்கப்படும் கோட்டா கற்கள் மற்றும் அதே தரம் கொண்ட உள்ளூர் கற்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 18-லிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மூங்கில் தரை விரிப்பான்கள், பித்தளை மண்ணெண்ணெய் ஸ்டவ், கையால் இயக்கப்படும் ரப்பர் ரோலர், ஜிப்புகள், நகைப் பெட்டிகள், பர்ஸ்கள் உள்ளிட்ட கைப் பைகள், புகைப்படங்கள், ஓவியங்கள் ஃபிரேம் செய்வதற்கான மரத்திலான சட்டங்கள், கண்ணாடிகள், கார்க்குகள், கற்களில் செதுக்கப்பட்ட ஓவியங்கள், அலங்கார சட்டங்களுடன் கூடிய கண்ணாடிகள், கண்ணாடிகளாலான சிலைகள் மற்றும் கண்ணாடி ஜாடிகள், கண்ணாடி பாத்திரங்கள், கேக் கவர்கள், அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட இரும்புகள், அலுமினியம் மற்றும் பித்தளைகள், காப்பர் உலோகங்கள், கைவினைப்பாடுகள் கொண்ட விளக்குகள், செதுக்கப்பட்ட கனிமங்கள் மற்றும் காய்கறிகள், பண்டைய கால கதாப்பாத்திரங்களின் ஓவிய அட்டைகள் போன்றவற்றுக்கான வரி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
18% ஆக வரிக் குறைக்கப்பட்டவை
நடுத்தர வர்க்க மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஏ.சி. இயந்திரங்கள், வாட்டர் ஹீட்டர், அயன் பாக்ஸ், வேக்குவம் கிளீனர்கள், கிரைண்டர், மிக்ஸி, ஜூஸ் பிழியும் எந்திரம் உள்ளிட்டவற்றுக்கான வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், 68 செ.மீ. அளவு வரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகள், விடியோ கேம்கள், வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருள்கள், ஹேர் க்ளிப்கள், முகச்சவரச் சாதனங்கள் ஆகிய பொருள்களின் மீதான வரியும் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லித்தியம் அயன் பேட்டரிகள், ஹேர் டிரையர், கழிப்பறைத் தெளிப்பான்கள், கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் காகிதப் பட்டைகள், பெயின்ட்கள், வார்னிஷ்கள், கிரேன் லாரிகள் போன்ற சிறப்புப் பயன்பாட்டுக்கான மோட்டார் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், கான்க்ரீட் கலவை லாரிகள், தெளிப்பான் லாரிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் லாரிகள், கிடங்குகள், துறைமுகம் அல்லது விமான நிலையங்களில் சரக்குகளை அனுப்புவதற்காகத் தற்காலிகமாகப் பயன்படுத்தப்படும் குடோன்கள், வாகனங்களுடன் இணைக்கப்படும் டிரெய்லர்கள் உள்ளிட்ட மேலும் பல பொருள்கள் மீதான வரிகளும் 28 லிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
எப்போது முதல் அமலாகிறது?
குறைக்கப்பட்ட இந்தப் புதிய வரி விகிதங்கள், ஜூலை 27-ம் தேதி முதல் அமலாகிறது. ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை விற்று முதல் ஈட்டும் தொழில், வர்த்தக நிறுவனங்கள், காலாண்டு அடிப்படையில் வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம். இதனால், வரி செலுத்துவோர்களில் 93 சதவிகிதம் பேர் பயனடைவார்கள். மேலும், வரிக் கணக்கு தாக்கல் செய்யும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி வரி விதிப்பு நடைமுறையில் பதிவுபெறாத நிறுவனங்களிடமிருந்து பொருள்கள் அல்லது சேவையைப் பெறும் வர்த்தகர்கள், அந்த நிறுவனங்களுக்குப் பதிலாக ஜி.எஸ்.டி வரியைச் செலுத்த வேண்டும். இதற்கு ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம் என்று பெயர். இந்த நடைமுறையை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அமல்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
`தேர்தலுக்காகக் குறைத்துள்ளார்கள்!’
இந்த நிலையில், அரசின் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், `இது வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை’ என்று சாடியுள்ளார். தேர்தல் நடைபெற இன்னும் ஒருசில மாதங்கள் இருப்பதால் ஜி.எஸ்.டி வரியிலிருந்து சில பொருள்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சில பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும்’ அவர் கூறியுள்ளார்.
`தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய அரசு வரிகளைக் குறைத்து வருகிறது. இதற்காகவே பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நல்லது என நினைக்கிறேன்’ என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
`கூட்டிய வரியைத்தான் குறைத்துள்ளார்கள்!’
இந்த வரிக் குறைப்பு வணிகர்களுக்குப் பயனளிக்குமா என்பது குறித்து வணிகர்கள் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையனிடம் கேட்டபோது,“கூட்டிய வரியைக் குறைத்துள்ளார்கள். இது ஒரு கண்துடைப்பு நாடகம். அரசாங்கத்திடம் வணிகர்கள் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கையே ஜி.எஸ்.டி வரி விதிப்பு வேண்டாம் என்பதுதான். நம் நாட்டைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி வரி விதிப்பே தேவையற்றது. ஆனால், இந்த அரசு, ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காக, வரிக் குறைப்பு செய்துள்ளோம் , வரி விலக்கு அளித்துள்ளோம் என அரசு அவ்வப்போது அறிவித்துக்கொண்டிருக்கிறது.
2000 வருடங்களுக்கு முன்னரே வரி விதிப்பு முறை அமலில் இருந்தது. அப்போதெல்லாம் எவ்வளவு விளைச்சல் விளைகிறதோ அதற்கு ஏற்ற வகையில் வரிக்கு உரியப் பாகத்தை எடுத்துக் கொள்வார்கள். அதுதான் வரி விதிப்பு. அதன் பின்னர், 1959-ம் ஆண்டு பொது விற்பனை வரி என்ற முறையை அரசு அறிமுகப்படுத்தியது. அதுவும் அரசாங்கம் நடத்துவதற்கு நிதி தேவை என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டதுதான். அதன் பிறகு பொது விற்பனை வரி முறையைக் கைவிட்டுவிட்டு, வாட் (VAT – Value added Tax) எனும் மதிப்புக் கூட்டு வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்தது அரசு. அப்படியானால், அன்றைக்கு இருந்த தலைவர்கள் பொது விற்பனை வரி முறையைக் கொண்டு வந்தது தவறான நடவடிக்கையா?
இது ஒருபுறம் இருக்க, இதுநாள் வரை வாட் வரி விதிப்பு முறையைச் சரியானது என்று சொல்லியவர்கள், அதையே தொடராமல், தற்போது ஜிஎஸ்டி-யைக் கொண்டு வந்தது ஏன்? ஆக மொத்தத்தில் இது எதைக் காட்டுகிறது என்றால், நம் தலைவர்கள் அவர்களது சொந்த புத்தியில் இதைச் செய்யவில்லை. எங்கோ இருந்து வந்த புத்தியில்தான், அதாவது வெளிநாட்டு அமைப்புகள், வெளிநாடுகளில் உள்ளவர்கள் சொல்லப்படுகிற வரி விதிப்பு முறையைக் கேட்டு அதனை அமல்படுத்தும் தலைவர்களை நாம் என்னவென்று சொல்வது?
பொதுவாக வரி விதிப்பு முறையில் தவறு நடக்கும். ஏனெனில் இது பணம் புழங்குகிற ஒரு துறை. இதன்மூலம்தான் அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்காது. ‘வரி விதிப்பு கடுமையாக இருந்தால், அதைப் பயன்படுத்தி அதிகாரிகள் கொள்ளையடிப்பார்கள். அரசாங்க கஜானாவுக்கு வருவதற்குப் பதிலாக அதிகாரிகளின் சட்டைப்பைகளுக்குத்தான் செல்லும். எனவே, வரி விதிப்பு கடுமையாக அல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும்’ பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்குப் புலவர் பிசிராந்தையார் வரி விதிப்பு முறை குறித்து புறநானூற்றுப் பாடல் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.
இதே கருத்தைத்தான் நாங்கள் பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசாங்கம் அதனையெல்லாம் கேட்காமல், கூடு விட்டுக் கூடு தாவிக்கொண்டிருக்கிறது. முதலில் இருந்த பொது வரி விதிப்பு முறைக்குப் பதிலாக வாட் கொண்டு வந்தார்கள். தற்போது `வாட்’டிலிருந்து ஜி.எஸ்.டி-க்குத் தாவியிருக்கிறார்கள்.
எங்களுக்கு இது வேண்டாம். பழைய பொது வரி விதிப்பு முறையையே கொண்டு வாருங்கள். அதன் மூலமாகவும் அரசாங்கத்துக்கு லாபம் வரத்தான் செய்தது. அப்படி அல்லாமல் இந்தச் சிக்கலான மற்றும் கடுமையான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நீடித்தால் அதனால் கடைசியில் பாதிக்கப்படுவது நுகர்வோர்களாகிய பொதுமக்கள்தாம். எங்களின் வாழ்வாதாரத்துக்குக் காரணமான பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை எதிர்க்கிறோம்” என்றார்.
அதே சமயம் பங்குச் சந்தை அனலிஸ்ட்டான ரெஜிதாமஸ், இந்த வரிக் குறைப்பு நடவடிக்கையால் பலனடைகிற, குறிப்பாக நுகர்வோர் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு விற்பனை அதிகரித்து லாபம் அதிகரிக்கும் என்பதால், இது சாதகமான அம்சம் என்றும், இதனால் அந்தத் துறை பங்குகள் பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.