அமெரிக்க அதிபர் டிரம்புடனான வரலாற்று சந்திப்புக்கு பின்னர் கிம் ஜாங் அன் வடகொரியாவுக்கு திரும்பினார் என இன்று அந்நாட்டின் அலுவல்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜூன் 14, 2018, 07:32 AM
சியோல்,
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே சிங்கப்பூரின் ஷாங்ரி லா ஓட்டலில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பில் அணு ஆயுத ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
அணு ஆயுதங்களை கைவிடுவோம் என டிரம்பிடம் கிம் உறுதியளித்து உள்ளார். இதற்கு பதிலாக வடகொரியாவுக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கப்படும் என டிரம்ப் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இந்த சந்திப்பிற்கு பின் டிரம்ப் அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் கிம் ஜாங் அன் உடனடியாக அங்கிருந்து நாடு திரும்புவது பற்றி பல யூகங்கள் வெளியாகின.
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான சந்திப்பு பற்றி சீன அதிபர் ஜி ஜின்பிங் கிம்மிடம் கேட்டு தெரிந்து கொள்வார் என கூறப்பட்டது. வடகொரிய குழு புறப்பட்டு சென்ற விமானங்களை சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து கவனித்து வந்தன.
இந்நிலையில், வடகொரியாவின் அலுவல்பூர்வ தகவல்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட கிம் ஜாங் அன் புதன்கிழமை காலை வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு வந்தடைந்து உள்ளார் என தெரிவித்துள்ளன.