தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துமனை அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி/சென்னை,
2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலம் வேண்டும். அங்கு மருத்துவ கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சை போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்படும். மேலும், தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி உள்பட உள்கட்ட அமைப்பு வசதிகளும் வேண்டும்  என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக தமிழக அரசின் சார்பில் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஐந்தில் ஒரு இடத்தில் தொடங்குவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இவ்வளவு நாளும் கடிதப்போக்குவரத்துகள் நடந்து வந்தன. கோர்ட்டிலும் வழக்கு போடப்பட்டிருந்தன. இறுதியில் மதுரையில் உள்ள தோப்பூர் அல்லது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசாங்கம்  முடிவு செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியது.
இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில்தான் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. தென்மாவட்டங்களை இணைக்கும் மதுரையில் மருத்துவமனை அமைக்கப்பட்டால் கன்னியாகுமரி முதல் திருச்சி வரை உள்ள மாவட்டங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளைக் கொண்டதும் மதுரைதான். அதனால், மதுரையில் மருத்துவமனை அமைந்தால்தான் மக்களுக்கு வசதியாக இருக்கும் என அனைத்துத் தரப்பு மக்களும், பல்வேறு கட்சியினரும் குரல்கொடுத்து வந்தனர். எப்படியும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில்தான் தொடங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இப்போது அதற்கு சாதகமான தகவல் வெளியாகியுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் விவகாரத்தில் மதுரை தோப்பூர் முன்னிலைப் பெற்றுள்ளது. மத்திய சுகாதாரத்துறை தகவல்களும் இதனையே உறுதிசெய்கிறது. டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் இடையே  அதிகாரப்பூர்வமான தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது எனவும் அத்தகவல்கள் குறிப்பிடுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படுகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்ததாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.