சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் பகலில் சுட்டெரித்த நிலையில் வடபழனி, முகப்பேர், தி.நகர், அடையார், வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில், பரனூர், ஆத்தூர் ஆகிய இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் ஒருமணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது. காற்றில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியத்தில் மிதமான மழை பெய்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை, புனைநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.