தமிழகத்தில் மேலும் 6 மாதங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு : தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட 12 மாநகராட்சிகள் உள்ளன. இவை தவிர, 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் என ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதவி வகித்தனர். இவர்களின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடத்துவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்தது. புதிய அறிவிக்கையை வெளியிட்டு 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தபோதும், தேர்தல் ரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் பின்னர், வழக்கு விசாரணைக்கு வந்தபோது வார்டு மறுவரையறை செய்யும் பணி நடப்பதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த கால தாமதம் ஏற்படுகிறது என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதனால், உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப் போடப்பட்டது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலம் மேலும் 6 மாதத்துக்கு நீட்டிப்பு வழங்க வகை செய்யும் மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்தார். இதற்கு, திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மசோதாவில் கூறியிருப்பதாவது:  மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிக ளின் வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர் பதவி, நகராட்சி தலைவர் பதவி மற்றும் மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த 4.10.2016ல் முடிவு செய்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் மேல்முறையீடு காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளின் தலைவர் பதவிகளில் அரசு அதிகாரிகள் தனி அதிகாரிகளாக நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், உள்ளாட்சி அமைப்புகளின் தொகுதி எல்லை மறுவரையறை செய்வது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

தனி அதிகாரிகளின் பதவி காலம் கடந்த ஜூலை 30ம் தேதியுடன் முடிவடைகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை இது வரை நடத்த இயலவில்லை. இதனால், உள்ளாட்சி மன்றங்களின் அமைப்புகளின் பணிகளை நிர்வாகம் செய்வதற்காக தனி அதிகாரிகளின் பதவி காலத்தை வருகிற டிசம்பர் 31ம் தேதி வரை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு அல்லது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு மன்றத்தின் முதலாம் கூட்டம் நடைபெறும் வரையில், இவற்றில் எது முந்தையதோ அதுவரை தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சட்டங்களை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு அறிமுக நிலையில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அப்போது, சைதாப்பேட்டை மா.சுப்பிரமணியன் (திமுக) பேசியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க காரணத்தை தேடி இருக்கிறீர்கள். நீதிமன்றம் கூறியதை 2 மாதத்தில் சரி செய்திருக்கலாம் ஆனால் அதற்கு அரசு முன் வரவில்லை. தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகத் தான் திமுக நீதிமன்றம் சென்றது. 2 ஆண்டாக தேர்தலை நடத்தாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய நிதி வரவில்லை. மக்களின் அன்றாட பிரச்னைகளை கூட எம்எல்ஏக்களிடம் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு கூட அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். பேரவை தலைவர் தனபால்: என் தொகுதி நன்றாகத்தான் இருக்கிறது.

மா.சுப்பிரமணியன்: குடிநீர் வாரியத்திற்கு இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை. மாநில தேர்தல் ஆணையர் கூடுதலாக கவனிக்கிறார். எனவே தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
குளச்சல் பிரின்ஸ் (காங்கிரஸ்): உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் பணிகள் நடைபெறவில்லை. ஜனநாயக கடமை ஆற்ற முடியவில்லை. குறைபாடுகளை சரி செய்ய உடனே தேர்தலை நடத்த வேண்டும்.
கடையநல்லூர் அபுபக்கர் (முஸ்லிம் லீக்): தேர்தல் நடக்காததால் உள்ளாட்சி பணிகள் முடங்கிப் போய் விட்டன. எனவே தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
அமைச்சர் வேலுமணி: வார்டு வரையறை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த பணிகள் நடந்து வருகின்றன. நீங்கள் நீதிமன்றம் சென்றதால் தேர்தலை நடத்த முடியவில்லை. ஆனாலும் எந்த பணிகளும் பாதிக்கப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படுகிறது. தேர்தலை நடத்த அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதன் பின்னர் குரல் வாக்கெடுப்பில் அமைச்சர் வேலுமணியின் தீர்மானம் நிறைவேறியது. தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீடிக்கும் மசோதா ஏற்கப்பட்டு நிறைவேறியது.

Leave a comment

Your email address will not be published.