தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி, பாஜகவில் மட்டுமல்ல மற்ற கட்சிகளிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் நேற்று (செப்டம்பர் 1) திடீரென தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி, பாஜகவில் மட்டுமல்ல மற்ற கட்சிகளிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு கமலாலயத்தில் கட்சித் தொண்டர்களை, நிர்வாகிகளை சந்தித்து முடித்து மாலை7.30 மணி அளவில் தமிழிசை சௌந்தராஜன் புறப்பட்டார். அங்கே குவிந்திருந்த தொண்டர்கள், நிர்வாகிகள் மட்டுமல்ல, பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கூட, ‘அடுத்த தலைவர் யார்?” என்றே பேசிக் கொண்டிருந்தார்கள்.
இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் மாணவர் அணியைச் சேர்ந்தவர்கள் என இளைய சமுதாயத்தினர் தலைவராக நியமிக்கப்படுவார் என்ற பேச்சுகள் ஒருபக்கம் நடக்க, இன்னொரு பக்கம் இன்றைய சூழலில் தமிழக பாஜகவுக்கு தலைமை ஏற்பது குறித்து தயக்கங்களும் சில நிர்வாகிகளுக்கு இருந்து வருகிறது.
அடுத்த தலைவராக வருவார் என்று ஊடகங்கள் வெளியிடும் பட்டியலில் இருக்கும் சிலரிடம் தனிப்பட்ட முறையில் பேசினோம்.
“ஏன் சார்.. நல்லா இருக்கிறது பிடிக்கலையா? கட்சி வேலையும் பாத்துக்கிட்டு தொழிலும் பாத்துக்கிட்டு இருக்கோம். தமிழிசை ஏதோ தாக்குப்பிடிச்சு இருந்துட்டாங்க. எங்களால முடியாது சார்” என்றனர் சீரியசாக. அவர்களே, “ரஜினிக்கு அழுத்தம் அதிகமாயிட்டிருக்கு சார். கமலாலயத்துக்கு ரஜினி வந்தா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாருங்களேன்” என்று சொல்லிவிட்டு தமிழிசை காரின் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்தார்கள்.
தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவுக்கு நெருக்கமான ஒரு தமிழக பாஜக பிரமுகரிடம் இதுகுறித்துக் கேட்டோம், “ உண்மைதான். தமிழக பாஜக தலைவர் பதவியை ஏற்கச் சொல்லி ரஜினிக்கு அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை ரஜினி ஏற்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. தமிழிசை ஆளுநர் என்ற அறிவிப்பு திடீர் என்று இருப்பது போல் தோன்றினாலும், அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்துவிட்டுத்தான் தமிழிசைக்கு இந்த பொறுப்பைக் கொடுத்திருப்பார் அமித் ஷா. விரைவில் யார் அடுத்த தலைவர் என்பது தெரிந்து விடும். காங்கிரசைப் போல மாதக் கணக்கில் நாங்கள் யோசித்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்றார்.

மின்னம்பலம்.காம்