தமிழக பொதுப்பணித்துறையில் இல்லாத பணியிடத்திற்கு கண்காணிப்பு பொறியாளர் நியமனம் :

தமிழக பொதுப்பணித்துறையில் இல்லாத பணியிடத்திற்கு கண்காணிப்பு பொறியாளர் நியமனம் : அரசை ஏமாற்றி ஒப்புதல் வாங்கிய அதிகாரிகள்

சென்னை:  பொதுப்பணித் துறையில் இல்லாத பணியிடத்திற்கு செயற்பொறியாளர் பதவி உயர்வின் பேரில் கண்காணிப்பு பொறியாளர் நியமனம் செய்யப்பட்டு இருப்பது அந்த துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுப்பணித்துறையில் காலியாக பணியிடங்கள் உள்ள இடத்தில் தான் அந்தந்த நிலையான பொறியாளர்கள் மாற்றப்படுவது வழக்கம் ஆனால், கடந்த சில நாட்களுக்கு பணியிடம் இல்லாத ஒரு இடத்தில் செயற்பொறியாளர் ஒருவர் பதவி உயர்வின் பேரில் கண்காணிப்பு பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். குறிப்பாக, சமீபத்தில் செயற்பொறியாளர் 19 பேர் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதில், நாகர்கோயில் கடல் தடுப்பு பிரிவு கோட்ட செயற்பொறியாளர் ஒருவருக்கு ஸ்வர்மா திட்ட கண்காணிப்பு பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். ஸ்வர்மா எனப்படும் மாநில நீர்வள ஆதார மேலாண்மை முகமையில் தலைமை பொறியாளர் தலைமையில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் என 10 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், கண்காணிப்பு பொறியாளர் பணியிடம் என்று ஒன்றே தற்போது வரை உருவாக்கப்படவில்லை. ஆனால், புதிதாக பணியிடங்கள் உருவாக்கப்பட்டது போன்று தமிழக அரசையே ஏமாற்றி அந்த பணியிடத்திற்கு அந்த கண்காணிப்பு பொறியாளர் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனால், தற்போது வரை அவரால் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்வர்மா பிரிவுக்கு கண்காணிப்பு பொறியாளர் பணியிடங்களை உருவாக்குவது தொடர்பாக அரசின் ஒப்புலுக்கு பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார். அந்த பணியிடத்திற்கு அரசு ஒப்புதல் அளித்தாலும் உலக வங்கியிடம் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது அவர் பொறுப்பேற்காத நிலையிலும், காலி பணியிடங்கள் இல்லாததாலும் தற்போது அந்த கண்காணிப்பு பொறியாளர் விடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, பொதுப்பணித்துறை வரலாற்றில் இது போன்று இல்லாத பணியிடத்திற்கு பணிமாறுதல் போடப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை. தற்போது அவர் பதவி உயர்வு பெற்றாலும், இல்லாத பணியிடத்தில் பொறுப்பேற்க முடியாது. ஒருவேளை அவருக்கு செயற்பொறியாளர் ஊதியம் வழங்கலாம். இல்லையெனில் அந்த கண்காணிப்பு பொறியாளர் 2 மாதங்களுக்கு மேலாக ஊதியம் பெறாமல் தான் இருக்க வேண்டும். இது போன்ற பிரசனை இனி ஏற்படாதவாறு அரசு தான் பார்க்க வேண்டும்’ என்றார்.🌐