தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வீடியோ பதிவை வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானி நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் சின்னத்திரை நடிகையான நிலானி, துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து காவல்துறை உதவி ஆணையர் உடையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் காவல்துறையைப் பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது வடபழனி போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
இதைத் தொடர்ந்து நிலானி தலைமறைவானார். 27 நாட்கள் தலைமறைவாக இருந்த அவரை வடபழனி போலீஸார் நேற்று முன்தினம் குன்னூரில் கைது செய்தனர். குன்னூர் வெலிங்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, அவரை போலீஸ் வாகனத்தில் நேற்று மதியம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். நிலானியை அடுத்த மாதம் 5ம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க 17வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி, நிலானி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள நிலானி சார்பில் அவரது வழக்கறிஞர் தமிழ்வேந்தன், சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “நான் சின்னத்திரை நடிகையாக உள்ளேன். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது தொலைக்காட்சி படப்பிடிப்பில் காவல்துறை அதிகாரியின் சீருடையில் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த சம்பவம் நடந்தபோது அதே சீருடையில் இருந்ததால் எனது கருத்துகளை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்தேன். தமிழக காவல்துறையை அவமதிக்கும் எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. எனவே எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த குற்றவியல் நடுவர் அங்காளஈஸ்வரி, விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.