தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க. வக்கீல் மனு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க. வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க.வை சேர்ந்த வக்கீல் ஜி.எஸ்.மணி நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சாதாரண சம்பவம் என்று கருதமுடியாது. மிகவும் தீவிரத்தன்மை கொண்ட அரிதிலும் அரிதான கொடுமையான சம்பவம்.
இந்த கொலைத்தாக்குதலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளும் அன்று பொறுப்பில் இருந்த கலெக்டரும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். தங்கள் துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு போலீசார் நேர்மையான, சுதந்திரமான விசாரணையை நடத்த முடியாது.
எந்த ஒரு சம்பவத்தின் மீதும் நேர்மையான, சுதந்திரமான விசாரணை என்பது அரசியல் சட்டத்தில் குடிமக்களுக்கு உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையாகும். எனவே, சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிட்டு தூத்துக்குடி தாக்குதல் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த விசாரணை கோர்ட்டு மேற்பார்வையில் நடத்தப்பட்டு இதுகுறித்த விரிவான அறிக்கையை கோர்ட்டுக்கு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அதேபோல தகவல் உரிமை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் வசதியை ரத்துசெய்துள்ள தமிழக அரசின் உத்தரவு அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்.
எனவே இந்த 3 மாவட்டங்களில் இன்டர்நெட் வசதியை நிறுத்திவைத்துள்ள தமிழக அரசின் ஆணையை உடனடியாக ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.