தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை கமிஷனுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த விசாரணை கமிஷனை அமைத்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலர் அர்ஜூனன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு நபர் விசாரணை கமிஷனின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தனர். மேலும் நேரடி சாட்சிகளை விசாரணை கமிஷன் அழைத்ததில் தவறில்லை. அதே நேரத்தில் அரசாணையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தப்பட்டு பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இதில் மாற்றம் செய்வது தொடர்பாக அரசிடம் தகவல் கேட்டு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
பின்னர், விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.