தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் விசாரணை கமிஷனில் தகவல் அளிக்க ஜூலை 27 வரை அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விவரங்களை நேரடியாகவோ, தபாலிலோ அளிக்க ஜூலை 27ம் தேதி வரை கால அவகாசத்தை விசாரணை ஆணையம் நீட்டித்துள்ளது. தூத்துக்குடியில் மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் 13 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஒரு நபர் விசாரணை கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இந்த கமிஷன் தனது முதற்கட்ட விசாரணையை முடித்துள்ளது.

தொடர்ந்து விசாரணை ஆணையத்திடம் பொதுமக்கள் தங்கள் தகவல்களை பிரமாண பத்திரமாக வழங்க ஜூன் 22ம் தேதி வரை அவகாசம் வழங்கியது. தற்போது அவகாசத்தை நீட்டித்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் செயலாளர் சுபா கூறியிருப்பதாவது:தூத்துக்குடியில் 22.5.2018 அன்று நிகழ்ந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள், பொதுமக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் தூத்துக்குடியில் மே 22ம் தேதி அன்று நிகழ்ந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள், அதன் விளைவாக நிகழ்ந்த இறப்புகள் மற்றும் காயங்கள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவை தொடர்பான சட்டம், ஒழுங்கு நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்தல். சூழ்நிலைக்கு தகுந்தவாறு தக்க பலப்பிரயோகம் செய்யப்பட்டதா? மற்றும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவதற்கு முன் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்து நிர்ணயம் செய்தல்.

காவல்துறையினரின் தரப்பில் அத்துமீறல் ஏதும் உள்ளதா? என்பது குறித்து உறுதி செய்தல். அவ்வாறு எனில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்தல். இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரை செய்தல். இதுகுறித்து தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடித் தொடர்புடையவர்களும், அதுகுறித்து அவர்களுக்கு தெரிந்த தகவல்களை சத்தியப்பிரமாண பத்திர வடிவில் 3 நகல்களை எடுத்து சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள விசாரணை ஆணையம் அலுவலகத்திலோ, தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை முகாம் அலுவலகத்திலோ ஜூன் 22ம் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ, நேரிடையாகவோ அல்லது தபால் மூலமோ அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த கால வரம்பு ஜூலை 27ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. சத்திய பிரமாண உறுதிமொழி பத்திரங்கள் (1+2 நகல்கள்) மற்றும் மனுக்கள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு முகவரிக்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.