தென்மேற்கு பருவமழை காலத்தில் இயல்பைவிட தமிழகத்தில் அதிக மழை பொழிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூலை 11-ம் தேதி வரை 86 மிமீ மழை பெய்துள்ளது. இது, இந்த காலகட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 27 சதவீதம் அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதா வது:

கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளது. அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் இதர பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அடுத்து வரும் இரு நாட்களுக்கும், அதே நிலை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 11-ம் தேதி வரையிலான தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 86 மி.மீ. இந்த காலகட்டத்தில் வழக்கமாக பெய்யக்கூடிய மழை அளவு 68 மி.மீ. இயல்பை விட 27 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.

புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னகள்ளாரில் 17 செமீ, வால்பாறையில் 15 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலாயில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு திசையில் இருந்து வட தமிழக கடலோரப் பகுதியில் 55 கிமீ வேகத்திலும், தென் தமிழக கடலோரத்தில் 60 கிமீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது. மேலும் ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.

இவ்வாறு இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக் கடலில் புவனேசுவரம் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.