பெங்களூரு: தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் ரூ.35 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் லண்டனிற்கு தப்பி சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மல்லையாவிடம் இருந்து கடன் தொகையை மீட்க வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதன் காரணமாக இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்க்பிஷர் நிறுவனம் ரூ.800 கோடி சேவை வரி செலுத்தாத காரணத்தினால் வரித்துறையினர் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்தனர். விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ஏ319 ஜெட் விமானம் பல்வேறு வசதிகளை கொண்டது. இந்த விமானத்தை சேவை வரித்துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் பறிமுதல் செய்தனர். அதிலிருந்து 4 முறை ஏலம் கோரப்பட்டது. ஆனால் விமானத்தை ஏலத்தில் எடுப்பதற்கு யாரும் முன்வராத காரணத்தினால் விமானத்தை விற்க முடியாமல் வரித்துறையினர் தவித்தனர்.
இந்நிலையில், மீண்டும் விமானத்தை மின்னணு முறையில் ஏலம் கோரினர். அமெரிக்காவை சேர்ந்த விமான நிறுவனத்தினர் ரூ.34.8 கோடிக்கு விஜய் மல்லையாவின் விமானத்தை ஏலத்தில் எடுத்தனர். 2016-ம் ஆண்டு இந்த சொகுசு விமானத்துக்கு அடிப்படை ஏலத்தொகையாக ரூ.152 கோடி நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.