நஜ்மா ஹெப்துல்லா, குலாம் நபி ஆசாத் உட்பட 5 பேருக்கு சிறந்த எம்.பி.க்கள் விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

நஜ்மா உட்பட 5 பேருக்கு சிறந்த எம்.பி.க்கள்  விருதை டெல்லியில் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

டெல்லி நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைந்துள்ள மைய மண்டபத்தில் இந்த விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சிறந்த எம்.பி.க்களாக 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 5 தலைவர்களை, இந்திய நாடாளுமன்றக் குழு விருதுக்கு தேர்வு செய்திருந்தது. மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், மணிப்பூர் மாநில ஆளுநருமான டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை எம்.பி.க்கள் தினேஷ் திரிவேதி (திரிணமூல் காங்கிரஸ்), பார்த்ருஹரி மஹ்தாப் (பிஜு ஜனதா தளம்),  ஹுக்கும் தேவ் நாராயண் தேவ் (பாஜக) ஆகியோர் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் 5 பேருக்கும் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி சிறப்பித்தார். விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிறந்த எம்.பி.க்களாக செயல்பட்டதற்காக அவர்கள் 5 பேருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. எம்.பி.க்களின் அனுபவம், நாடாளுமன்றத்தில் விவாதத்தில் பங்கேற்கும் திறன், விழிப்புணர்வு விவகாரங்கள், நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக அறிந்து வைத்திருத்தல் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்கள் இந்த விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து 5 பேரை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இறுதியாக தேர்வு செய்தார்.

Leave a comment

Your email address will not be published.