நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீத அளவு வரை செல்லலாம். இது குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்தார்.
அந்நியச் செலாவணி புழக்கத்தில் ஏதேனும் ஏற்ற, இறக்க நிலை திடீரென ஏற்படும்போது அதை சமாளிக்கும் வகையில் அரசு திட்டங்கள் வைத்திருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று அவர் மேலும் தெரி வித்தார்.

நடப்புக் கணக்கு பற்றாக் குறையானது 2 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை செல்லலாம். ஆனால் நாட்டின் அந்நிய செலாவணி புழக்கம் ஸ்திரமாக இருக்க வேண்டும். அத்தகைய சூழலில் நம்மால் பற்றாக்குறை 2.5 சதவீதம் வரை சென்றாலும் சமாளிக்க முடியும் என்று கார்க் குறிப்பிட்டார்.
அந்நியச் செலாவணி வரத்து மற்றும் இந்தியாவிலிருந்து வெளியேறும் அந்நியச் செலாவணி அளவைப் பொறுத்தே பற்றாக்குறை ஏற்படும். 2017-18-ம் நிதி ஆண்டில் பற்றாக்குறை 1.9 சதவீதமாக இருந்தது. இது முந்தைய நிதி ஆண்டை (2016-17) விட 0.6 சதவீதம் அதிகமாகும்.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பில் ஏற்படும் சரிவு ஆகியவை காரணமாக பற்றாக்குறை அளவு அதிகரிக்கிறது.
கடந்த ஆண்டு இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 16,000 கோடி டாலராகும். ஒருவேளை கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தால் அது பற்றாக்குறை அதிகரிக்க காரணமாகிவிடும் என்று கார்க் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரலில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 66 டாலராக இருந்தது இப்போது 74 டாலராக உயர்ந்துள்ளது என்றார். பற்றாக்குறை அளவு 2.5 சதவீதத்திலிருந்து 3 சதவீத அளவுக்கு செல்வதானது கச்சா எண்ணெய் விலையேற்றத்தைப் பொறுத்தே அமையும். இது எவரது கையிலும் இல்லை என்று கார்க் கூறினார்.
ஆனால் எந்த சூழலில் எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது கடந்த 10 ஆண்டுக்காலமாக கச்சா எண்ணெய்யின் போக்கை கணித்துள்ளதால் புரியும். அந்த வகையில் அரசு விழிப்புடன் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.