நடிகர் கமல்ஹாசன் தனது புதிய கட்சியை பதிவு செய்ய இன்று டெல்லி பயணம்

நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய டெல்லி சென்றுள்ளார். #KamalHassan
புதுடெல்லி,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது புதிய கட்சிக்கான அங்கீகாரத்தினை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக டெல்லி சென்றுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன், தனது கட்சியை முறைப்படி பதிவு செய்ய, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். அதன்படி, கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் இது குறித்து எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை. இதன்மூலம் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்ததை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று முறையாக பதிவு செய்யப்படுகிறது.

இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியை முறையாக பதிவு செய்யும் பொருட்டு கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்திக்கிறார்.  இதற்காக, கமல்ஹாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர். காலை 11 மணியளவில், அவர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கெஜ்ரிவாலுடன் சந்திப்பு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் இன்று சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஒன்பது நாட்களாக டெல்லி துணை நிலை ஆளுனர் அலுவலகத்தில் நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை நேற்றுடன் நிறுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.