மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவிலில் மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் நாளன்று பால்குட விழாவும், அதைத்தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்து செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான பால்குட விழா கடந்த 6-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆடி முதல் நாளான நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது. இதையொட்டி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆண்டவர் கோவில் அருகே உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னர் கோவிலின் பரம்பரை அறங்காவலரும், பொய்கைப்பட்டி, குமாரவாடி ஜமீன்தாருமான கே.ஆர்.கே.முத்து வீரலெக்கைய நாயக்கர் தாரை, தப்பட்டையுடன் முன்செல்ல அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அகத்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் நல்லாண்டவர் கோவிலை வந்தடைந்ததும், அங்கு அனைத்து பால்குடங்களும் இறக்கி வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து நல்லாண்டவருக்கு முத்துகண்ணன் சிவாச்சாரியார் தலைமையிலான குருக்கள் தேன், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக, ஆராதனை செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலால் நல்லாண்டவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிரபாகர், கோவிலின் பரம்பரை அறங்காவலரும், ஜமீன்தாருமான கே.ஆர்.கே.முத்துவீரலெக்கைய நாயக்கர், மணியம் சண்முகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் ஊர் நாட்டாண்மைகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியை டாக்டர் கரு.ராசகோபாலன் தொகுத்து வழங்கினார்.