நாடாளுமன்றத்தில் வீசிய ராகுல் புயல் – ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி அல்ல… இது ஜல்லிக்கட்டுக் காளை!

பி.ஜே.பி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் புயல் பேச்சால், ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்ல, அன்றைய தினம் ட்விட்டரில் உலக ட்ரெண்டில் இருந்தார் ராகுல் காந்தி.

தன் பாட்டி இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப் பட்டபோது, ராகுலுக்கு 14 வயது. தனக்கு பேட்மின்டன் சொல்லிக்கொடுத்த, தன்னிடம் நண்பர்கள்போல் பழகிய செக்யூரிட்டிகளே தன் பாட்டியைக் கொன்ற அதிர்ச்சி, அந்தச் சிறுவனிடம் நீண்டகாலம் இருந்தது. அடுத்த சில ஆண்டுகளில், தன் தந்தையை இழந்தார் ராகுல். அதுவும் சாதாரண மரணம் அல்ல. அப்போது, ராகுலுக்கு 21 வயது. அந்தத் துயரச் சம்பவங்கள், பொதுவாழ்க்கைக்கு வருவதற்கு ராகுலுக்கு பெரும் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதையும்மீறி, அவர் அரசியலுக்கு வந்தார். ஆனபோதும், அவர் வருகையை, அவரின் செய்கையை ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டுப் போக்காகவே காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் பார்த்தனர். 2009-ல் காங்கிரஸ் வெற்றிபெற்ற சமயத்தில், பிரதமராகும் வாய்ப்புகூட ராகுலுக்கு இருந்தது. ஆனாலும்,  அவர் இன்னும் அரசியலில் முதிர்ச்சியடைய வேண்டுமென்று சொல்லி, அவரை ஓரங்கட்டினார்கள்.

ராகுல், அரசியலுக்கு வந்து 14 வருடங்கள் ஆகின்றன. இதுவரை, அவரைப் பற்றிய செய்திகள், ‘ராகுல் காந்தி தலித் வீட்டில் சாப்பிட்டார், விவசாயிகளுடன் பேசினார், குடிசை வீட்டில் உட்கார்ந்து தேநீர் அருந்தினர், ஒரு மாதம் அமெரிக்காவுக்குப் போனார்…’ இப்படித்தான் இருக்கும். ஆனால், இன்றைய ராகுலின் சமீபத்திய நாடாளுமன்றப் பேச்சும், அவரது ‘கட்டிப்பிடி’ ஆக்‌ஷனும், வரலாற்றின் இறுதிவரை இருக்கும்.

ராகுல் நிறையப் பொதுமேடைகளில் உரையாற்றியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் வாதம் செய்திருக்கிறார். பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தன் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ‘எதிர்’க்கட்சிகளின் குறைகளைக் கூறி பல ஊர்களுக்குச் சென்று வாக்கு சேகரித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பேச்சில் எப்போதும் ஓர்  அமைதி இருக்கும். தான் பேசுகிற விஷயங்களுக்கு உடல்மொழியைப் பெரிதும் பயன்படுத்த மாட்டார். உணர்வுகளுக்கு அதிகம் இடம் கொடுக்க மாட்டார். ஆனால், நாடாளுமன்ற மக்களவையில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீதான விவாதத்தின்போது, ராகுலின் பேச்சு முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. கருத்துகளை வெளிப்படுத்தியதில் இருந்த கூர்மையாக இருக்கட்டும், கையையும் தலையையும் தான் பேசுகிற விஷயங்களுக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தியதாக இருக்கட்டும், 14 வருட அரசியல் வரலாற்றில் அவர் எவ்வளவு முதிர்ச்சி அடைந்திருக்கிறார் என்பதற்கு ஓர் உதாரணமாக அமைந்தது ராகுலின் இன்றைய பேச்சு. மத்திய அரசு வேலைவாய்ப்பு உருவாக்குவதில் அடைந்த தோல்வி,, ஜி.எஸ்.டி அமல்படுத்தியதில் குளறுபடி, ரஃபேல் ஒப்பந்த முறைகேடு என்று பல விஷயங்களைப் பட்டியலிட்டு வெளுத்துவாங்கினார்.

அமித் ஷா மகன் சம்பாதிப்பதற்கு பிரதமர் துணைபோகிறார் என்று ஆவேசம் கொண்டார் ராகுல். “நான் பிரதமரின் புன்னகையைப் பார்க்கிறேன். ஆனால், அதிலொரு பதற்றம் தெரிகிறது. என்னைப் பார்க்க முடியாமல் தவிக்கும் அவரை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் கண்களில் உண்மை இல்லை” என்றார் ராகுல். அரசியல்ரீதியான விமர்சனங்களைத் தாண்டி மோடியை அசைத்துப் பார்த்த சொற்கள் அவை. ‘இரும்புப் பெண்மணி எனச் சொல்லப்படும் இந்திரா காந்தியின் பேரன்தான் நான்’ எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ராகுல்.

‘இனியும் நான் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி இல்லை. ஜல்லிக்கட்டுக் காளை’ என்கிற உத்வேகம் அவரிடம் தெரிந்தது. எதிர்க்கட்சிகள் உள்பட அவையில் இருந்த எல்லாத் தரப்பினரும் பாராட்டும் அளவுக்குத் தவிர்க்க முடியாதவரானார் ராகுல். “தன்யவார்… நமஸ்கார்” என்று ராகுல் சொல்லிப்  பேச்சை முடித்ததும், நன்றாக ஆடிவிட்டு கேலரி திரும்பும் பிளேயருக்கு ஸ்டேடியத்திலுள்ள மக்கள் கொடுக்கும் ஆரவாரத்தைப் போன்று இருந்தது அந்தச் சூழல். முத்தாய்ப்பாக, யாரை எதிர்த்துப் பேசினாரோ, யாருடைய அரசியல் செயல்பாடுகளை விமர்சித்தாரோ, அவரிடமே சென்று தன் அன்பை வெளிப்படுத்தினார். மோடியைக் கட்டிப்பிடித்துவிட்டு ராகுல் நடந்துவரும்போது, எல்லோரும் மேசைகளைத் தட்டினார்கள்.

Leave a comment

Your email address will not be published.