நாடு முழுவதும் 50 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2019) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை தொடர பா.ஜனதா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சென்று அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க கட்சி திட்டமிட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி தலைமையில் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் பங்கேற்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார திட்டங்கள் வகுக்கப்படும் என பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

2 அல்லது 3 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கி நடத்தப்படும் இந்த கூட்டம் ஒவ்வொன்றிலும் லட்சக்கணக்கான மக்களை பங்கு பெற வைக்கவும், இதன் மூலம் 100–க்கும் மேற்பட்ட தொகுதி மக்களை பிரதமர் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தவும் பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது.

இந்த அடிப்படையில் முதல் பொதுக்கூட்டத்தை பஞ்சாப்பின் மலோட் பகுதியில் பா.ஜனதா கடந்த 11–ந்தேதி நடத்தியது. இதில் பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் இந்த மாதம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இதைப்போல பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நதின் கட்காரி ஆகியோரும் தலா 50 கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த 200 பொதுக்கூட்டங்கள் மூலம் தேர்தலுக்கு முன் 400–க்கும் மேற்பட்ட தொகுதி மக்களை பா.ஜனதா தலைவர்கள் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த கூட்டங்களை தவிர இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களிலும் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.

இந்தநிலையில் உத்தரபிரதேசத்தின் அசம்கார், வாரணாசி, மிர்சாபூர் ஆகிய இடங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பொதுக்கூட்டங்களிலும் அவர் உரையாற்றுகிறார்.

Leave a comment

Your email address will not be published.