நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், குஜராத், தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்த வாரம் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 வரை 4 மாதங்களுக்கு நீடிக்கும். இந்த ஆண்டு 3 நாள்களுக்கு முன்பாக மே 29-ஆம் தேதியே பருவ மழை தொடங்கிவிட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், நாட்டின் பல்வேறு இடங்கள் நல்ல மழைப்பொழிவை பெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்திய வானிலை மையம்  வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதேபோல், உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி, மேற்கு வங்கத்தில் இமய மலையையொட்டிய மாவட்டங்களிலும், சிக்கிம், பிகாரிலும் செவ்வாய்க்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், தமிழகம் ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், ஜார்க்கண்ட், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், கொங்கன் பகுதி, ராயலசீமா, கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
மகாராஷ்டிரத்தின் மத்தியப் பகுதி, மேற்கு வங்கத்தில் இமய மலையையொட்டிய மாவட்டங்கள், கர்நாடகத்தின் கடலோரப் பகுதி, குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகள், சத்தீஸ்கர், ஒடிஸா, மேகாலயா, கேரளம், கர்நாடகத்தின் உள்பகுதிகளில் வியாழக்கிழமையும், கோவா, கொங்கன் பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் கனமழை பெய்யக்கூடும். நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் அன்றைய தினம் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.