நெய்மார் சோபிக்கவில்லை: பிரேசில்-சுவிட்சர்லாந்து ஆட்டம் ‘டிரா’

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஜூன்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. நட்சத்திர வீரர் நெய்மார் எதிர்பார்த்தப்படி சோபிக்கவில்லை.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரோஸ்டோவ் ஆன் டான் நகரில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் (இ பிரிவு) 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது.
இதில் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 12-வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் பாலின்ஹோ அடித்த பந்து மயிரிழையில் கோல் கம்பத்தின் அருகில் வெளியே சென்றது. நட்சத்திர வீரர் நெய்மார் அடித்த பிரிகிக் வாய்ப்பு வீணானது.
20-வது நிமிடத்தில் பிரேசில் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் நடுகள வீரர் பிலிப் காட்டினோ தூக்கி அடித்த பந்து வலது புற கோல் கம்பத்தில் பட்டு மின்னல் வேகத்தில் கோலுக்குள் அற்புதமாக பாய்ந்தது. இதனை தடுக்க முடியாமல் சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோமெர் திகைத்து நின்றார்.
அதன் பிறகு பிரேசில் அணியினர் பந்துடன் எதிரணி கோல் எல்லையை முற்றுகையிட்டாலும், பந்தை வெற்றிகரமாக கோலுக்குள் திணிக்க தவறினார்கள். முதல் பாதியில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
பதில் கோல் திருப்ப சுவிட்சர்லாந்து அணியினர் கடும் முனைப்பு காட்டினார்கள். 50-வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சுவிட்சர்லாந்து வீரர் ஷெர்டன் ஷிகிரி கோல் எல்லையை நோக்கி பந்தை தூக்கி அடித்தார். அதனை சக வீரர் ஸ்டீவன் சுபேர் தலையால் அபாரமாக முட்டி கோலுக்குள் திருப்பினார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
பிரேசில் அணி மீண்டும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது. அதனை சுவிட்சர்லாந்து தடுப்பு ஆட்டக்காரர்கள் கடுமையாக போராடி முறியடித்தனர். பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் வசம் பந்து சென்றதும், அவரை குறி வைத்து சுவிட்சர்லாந்து வீரர்கள் தாக்கினார்கள். இதனால் அவரது ஆட்டம் முடங்கி போனது. அது பிரேசில் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. சில நேரங்களில் நெய்மாருக்கு, சுவிட்சர்லாந்து வீரர்கள் முரட்டு ஆட்டம் மூலமும் முட்டுக்கட்டை போட்டு முன்னேற விடாமல் தடுத்தனர். நெய்மாரை மட்டும் 10 முறை சுவிட்சர்லாந்து வீரர்கள் ‘பவுல்’ செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
வித்தியாசமான சிகை அலங்காரத்தால் ரசிகர்களை கவர்ந்த நெய்மார் தனது நளினமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஏமாற்றம் அளித்தார். அவர் அடித்த ஷாட்கள் சரியாக இலக்கை நோக்கி செல்லவில்லை. கடைசி கட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியினர் தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தி ஆட்டத்தை டிராவை நோக்கி அபாரமாக நகர்த்தினார்கள்.
முடிவில் விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளாக கணிக்கப்பட்டுள்ள ஸ்பெயின், அர்ஜென்டினா அணிகளை போல் பிரேசில் அணியும் தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றியை சுவைக்க முடியவில்லை. 1978-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் பிரேசில் அணி தனது முதல் ஆட்டத்தில் வெற்றியை பெறாமல் போனது இதுவே முதல்முறையாகும். டிரா செய்ததன் மூலம் 1966-ம் ஆண்டுக்கு பிறகு சுவிட்சர்லாந்து அணி உலக கோப்பை போட்டியில் தனது தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற பெருமையை தக்க வைத்து கொண்டது.
போட்டிக்கு பிறகு பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த ஆட்டத்தில் வெற்றியை எதிர்பார்த்தேன். டிரா கண்டது மகிழ்ச்சி அளிக்கவில்லை. முதல் கோல் அடிக்கும் வரை எங்களுக்கு அதிக நெருக்கடி இருந்தது. அதிக பதற்றமும், எதிர்பார்ப்பும் எங்களது துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்த விடாமல் செய்து விட்டதாக நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். நாங்கள் உருவாக்கிய சில வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை’ என்றார்.

Leave a comment

Your email address will not be published.