நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் எளிய வழிகள்..!

மழையில் கொஞ்சம் நனைந்தால் சளி பிடித்துக் கொள்கிறதா? வெயிலில் கொஞ்சம் நடந்தாலே தலை வலிக்கிறதா? புகை என்றால் அலர்ஜியா? அடிக்கடி காய்ச்சல் வருகிறதா? இதற்கெல்லாம் காரணம் உங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உள்ளது என்கிறது மருத்துவம். உண்மையில் உடலுக்கான சொத்து என்றால் அது நோய் எதிர்ப்புச் சக்தி மட்டுமே. இந்த சொத்து நிரந்தரமாக நம்முள் தங்கி இருக்க ரொம்ப கஷ்டப்படவெல்லாம் வேண்டியதில்லை. உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொண்டால் போதும், உடல் ஆரோக்கியம் பெறும்.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

முறையான உணவுப் பழக்கம், சுத்தமான சூழல், போதுமான உறக்கம், உடலுழைப்பு, ஆரோக்கியமான மனநிலை போன்றவை உங்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நார்ச்சத்தும் குறைவான கொழுப்பும் கொண்ட உணவுகள் எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு நாளைக்கு 8 குவளை நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். கீரைகள், நெல்லிக்காய், பால் பொருட்கள், பீட்ரூட், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பரங்கிக்காய், ஆப்ரிகாட், சிட்ரஸ் மற்றும் பெர்ரி பழங்கள், குடமிளகாய், பூண்டு, மஞ்சள், வெங்காயம், நட்ஸ், கிரீன் டீ, பச்சைப் பட்டாணி, முளை கட்டிய தானியங்கள், தேன் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் முக்கிய உணவுகள். நோய் எதிர்ப்பு சக்தி பெற ஆரோக்கியமான உணவுகளே போதுமானது. மற்றபடி வைட்டமின் மாத்திரைகளோ, செயற்கை மாவுப் பொருட்களோ தேவையில்லை. புகை, மதுவை ஒழித்து யோகா, தியானம், உடற்பயிற்சியை மேற்கொண்டால் நீங்கள் விரும்பிய உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.

Leave a comment

Your email address will not be published.