பங்குச்சந்தையில் பணம் அள்ள பொறுமை அவசியம் – வாரன் பஃபெட் சொல்லும் ரகசியம்

மும்பை: பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பொறுமையும், சந்தை இறக்கத்தை சந்திக்கும்போது அதிக மன தைரியமும் இருந்தால் நாம் நினைத்ததை விட அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று வாரன் பஃபெட் ஆலோசனை கூறியுள்ளார் உலகின் மூன்றாவது கோடீஸ்வரரும், பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முன்வருபவர்களுக்கு கற்றுத்தரும் குருவாக விளங்குபவர் வாரன் பஃபெட். இவர் ஒரு பங்கிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ முதலீடு செய்தால், இவரை பின்பற்றி முதலீட்டாளர்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு அதே பங்கில் முதலீடு செய்வதுண்டு. அந்த பங்கைப் பற்றி எந்த ஒரு விபரமும் தெரியாவிட்டாலும் தைரியமாக முதலீடு செய்வார்கள்.

பங்குதாரர்களுக்கு கடிதம் வாரன் பஃபெட் ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு கடிதம் எழுதுவது வாடிக்கை. இந்த ஆண்டும் பஃபெட் தன்னுடைய நிறுவன பங்குதாரர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் எதிர்காலத் திட்டங்கள், எதிர்காலத்தில் எந்த எந்த துறைகளில் முதலீடு செய்யப்போகிறோம், புதிய கணக்கியல் கொள்கைகள், பெரிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யமுடியாமல் போனதற்கான காரணங்களையும் விளக்கி கடிதம் எழுதியுள்ளார்.

பங்குகளை வாங்குவது எப்படி வாரன் பஃபெட்டின் தாரக மந்திரமே, எல்லோரும் விற்கும்போது வாங்க வேண்டும், எல்லோரும் வாங்கும்போது நாம் விற்கவேண்டும். இந்த சூட்சமத்தை தெரிந்து வைத்துக்கொண்டால் பங்குச் சந்தையை நம் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்ட மாதிரியாகும். இல்லை என்றால் நம் கையைச் சுட்டுகொள்ளவேண்டியது இருக்கும். திறமை, போட்டி போடக்கூடிய பலம் மற்றும் உயர்தர மேலாண்மை, தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான நிலைத்த சொத்துக்கள், உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கும் வாய்ப்புள்ள நிறுவனங்களின் பங்குகளை ஆராய்ந்து அவை விலை மலிவாக கிடைப்பதாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு வாங்க வேண்டும்.
தினசரி வாங்கி விற்கும் பங்கு ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்க நினைக்கும்போது, அதனை நாம் வெறும் நிறுவனத்தின் அடையாளமாகவோ அல்லது குறியீடாகவோ மட்டும் பார்க்கும் கண்ணோட்டத்தை தவிர்த்து விட்டு, அதனை நீண்டகால முதலீடாவே கவனத்தில் கொள்ளவேண்டும். தினசரி வர்த்தகப் பொருளாகவோ அல்லது தினசரி வாங்கி விற்கும் பங்காகவோ நினைக்கும் போக்கை தவிர்க்கவேண்டும்.

லாபம் கிடைக்காது பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், தங்களின் போக்கை நினைத்தபோதெல்லாம் இஷ்டத்திற்கு மாற்றி மாற்றி வாங்கி விற்கும் போக்கை கைவிடவேண்டும் (வடிவேலு காமெடி போல செத்து செத்து விளையாடுவது). அப்படி செய்தால் நாம் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. கூடவே பரிவர்த்தனைக் கட்டணமும் அதிகமாக இருக்கும். கடைசியில் நாம் வாங்கி விற்றதில் கிடைத்த லாபத்தைக் காட்டிலும் அதற்கு தண்டமாக செலுத்திய பரிவர்த்தனைக் கட்டணம் அதிகமாக இருக்கும்.

3 comments

Leave a comment

Your email address will not be published.