பந்துவீச்சு, பேட்டிங் சொதப்பல்; கோலி படை 5 ஆண்டுகளில் முதல்முறையாக தொடரை இழந்தது: ஒரு நாள்தொடரை வென்றது இங்கிலாந்து

ஜோய் ரூட்டின் தொடர்ச்சியான 2-வது சதம், கேப்டன் மோர்கனின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால் லீட்ஸில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒரு நாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இங்கிலாந்து அணி. கடந்த 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அருமையான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுலை பெஞ்சில் அமரவைப்பதற்கு பதிலாக, ரெய்னாவுக்கு ஓய்வளித்து இருக்கலாம் அல்லது பேட்டிங்கில் திணறிவரும் தோனியை பெஞ்சில் அமரவைத்துவிட்டு ராகுலை எடுத்திருக்கலாம்

இங்கிலாந்து வீரர் ஜோய் ரூட் கடந்த 2-வது போட்டியிலும் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார், அதேபோல, இந்த போட்டியிலும் அவரின் சதம் வெற்றிக்கு வித்திட்டது. இவருக்கு தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ரஷித் அபாரம்

சுழற்பந்துவீச்சில் இந்திய அணிக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் “லெக் ஸ்பின்னில்” கலக்கிய அதில் ரஷித் நேற்று முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும், விராட் கோலியை போல்டாக்கிய பந்து, அவரின் லெக்ஸ்பின்னுக்கு கிடைத்த சான்று. கோலி திகைத்துவிட்டார். சிறப்பாக பந்துவீசிய ரஷித்துக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்தது. 259 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்கை விரட்டிச் சென்ற இங்கிலாந்து அணி 33 பந்துகள் மீதிருக்கையில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

பிரேக்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 9 ஒருநாள் தொடர்களை இழக்காமல் வெற்றி நடைபோட்டு வந்தது. அதற்கு முதல் முறையாக “பிரேக்” போட்டுள்ளது இங்கிலாந்து அணி.

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை இந்திய அணி கோலி தலைமையில் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை இழந்ததில்லை. ஜிம்பாப்வே, இலங்கை(இருமுறை), தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து என இந்த நாடுகளுக்கு எதிரான அனைத்து ஒருநாள் தொடரையும் கோலி தலைமையில் இந்திய அணி வென்று இருந்தது.

கோலி தலைமையில் இதுவரை 52 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 39 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

சிரமம் கொடுக்காத பந்துவீச்சு

இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எந்தவிதமான சிரமத்தை கொடுக்காத வகையில்தான் இந்திய அணியின் பந்துவீச்சு அமைந்திருந்தது என்று கூறலாம். இங்கிலாந்து வீரர் ரஷித்துக்கும், மொயின் அலிக்கும் கைகொடுத்த சுழற்பந்து வீச்சு இந்திய வீரர்களுக்கு ஏன் கைகொடுக்கவில்லை என்ற கேள்வி எழுவதால், ஆடுகளத்தை குறை கூற இயலாது.

மெதுவான ஆடுகளம், பந்துகள் அதிகமாக எழும்பவில்லை என்ற விமர்சனங்கள் இந்திய தரப்பில் இருந்து வைக்கப்பட்டாலும், டி20 போட்டிகளில் அதிகமாக விளையாடி பழக்கப்பட்டுவிட்டதால், நீண்ட ஓவர்களை துல்லியமாக வீசும் பாணியில் இருந்து இந்திய வீரர்கள் விலகுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

அதுமட்டுமல்லாமல், டி20 போட்டித்தொடரில் பந்துவீச்சில் இருந்த மிரட்டல், துல்லியம் ஒருநாள் போட்டிகளில் காணமுடியவில்லை. அடுத்து வரும் டெஸ்ட் தொடர் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி தரும் விதத்தில்தான் அமையப்போகிறது.

முதல் போட்டியில் சிறப்பாக இருந்த பந்துவீச்சு 2-வது போட்டியில் மோசமான பந்துவீச்சு இருந்ததால், அதிகமான ரன்கள் வாரி கொடுக்கப்பட்டு தோல்விக்கு வித்திட்டது. இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களும் சொதப்பினர், பந்துவீச்சாளர்களும் நெருக்கடியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த தவறிவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல் நேற்றைய போட்டியில் 10 ஓவரில் இந்திய அணி 32 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இது கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக தர்மசலாவில் சேர்த்த ஸ்கோருக்கு அடுத்தார்போல் சேர்க்கப்பட்ட மிக குறைவாகும்.

பேட்டிங்கில் திணறல்

தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் தவண், ரோகித் சர்மா இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க திணறினார்கள். மார்க் வுட் வீசிய முதல் ஓவர் மெய்டனாக அமைந்தது. பேட்டிங்கில் தொடர்ந்து திணறிய ரோகித் சர்மா 18 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்த்து வில்லி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

முதல் போட்டியில் சதம் அடித்த,ரோகித் சர்மா அடுத்த இரு போட்டிகளிலும் தன்னுடைய பேட்டிங் நிலத்தன்மையை தக்கவைக்க தவறிவிட்டார். இந்த தொடரில் மொத்தம் 137 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

அடுத்து களமிறங்கிய கோலி, தவணுடன் சேர்ந்தார். டி20 தொடரிலும் பேட்டிங்கில் சொதப்பிய ஷிகர் தவண் ஒருநாள் தொடரிலும் சோபிக்கவில்லை. 18-வது ஓவரில் தவண் ரன் அவுட் ஆகினார். 3 போட்டிகளிலும் சேர்த்து 120 ரன்கள் மட்டுமே சேர்த்த தவண், இந்த போட்டியில் 44 ரன்கள் மட்டுமே சேர்த்தர். இங்கிலாந்து தொடர் முழுவதும் ஷிகர் தவணின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது.

கோலிக்கு படம் காட்டிய ரஷித்

இந்திய அணியைப் பொருத்தவரை கேப்டன் விராட் கோலி மட்டுமே அதிகபட்சமாக 71 ரன்கள் சேர்த்தார். கேப்டனாக பொறுப்பு ஏற்று மிகவேகமாக 49 இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் ரன்களை கோலி கடந்துள்ளார். ஆனாலும் கோலியின் இந்த மைல்கல், இந்திய அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

இங்கிலாந்து தொடர் என்று கூறியதில் இருந்து விராட் கோலியின் முகத்தில் படபடப்பு இருந்தது. அதற்கு முன்ஏற்பாடாகவே கவுண்டி தொடரில் விளையாடி தன்னை தயார்படுத்த ஆயத்தமானார் கோலி. அதன்பின், துணிச்சலாக தொடரை எதிர்கொண்டாலும், இப்போது கிடைத்துள்ள தோல்வி அவருக்கு மீண்டும் ஒரு அச்சத்தையும், கடந்த முறை இங்கிலாந்து பயணத்தையும் நினைவூட்டியுள்ளது.

இந்த ஒரு நாள் தொடர் முழுவதும் கோலி, சுழற்பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்துள்ளது கவனிக்கத்தக்கது. ரஷித், மொயின் அலி ஆகியோரின் சுழற்பந்துவீச்சுக்கு கோலி இரையாகி இருப்பது, சுழற்பந்துவீச்சை நன்கு சமாளித்து ஆடக்கூடிய கோலியின் திறமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.

அதிலும் நேற்றைய போட்டியில் லெக்ஸ்பின் பந்தை பேக்புட் ஆட முற்பட்டு போல்டாகி, பின்னர் கேமிரா வெறித்துப் பார்த்தது கோலியின் அதிர்ச்சியை காட்டுகிறது. சுழற்பந்துவீச்சை சமாளித்து ஆடுவதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

நீண்டகாலத்துக்கு பின் அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் வெளியேறியது ஏமாற்றமாகும்.

வாய்பை வீணடித்த ரெய்னா

டி20 தொடரிலும் எதிர்பார்த்த அளவுக்கு ரெய்னா ரன் குவிக்கவில்லை. டி20 தொடரில் கே.எல் ராகுலோடு ஒப்பிடும் போது ரெய்னாவின் பேட்டிங் திறமை ஒன்றும் சிறப்பாக இல்லை. ரெய்னாவி்ன் மோசமான பேட்டிங் ஃபார்ம் ஒருநாள் தொடரிலும் தொடர்ந்தது.

இந்த தொடரில் ரெய்னா மொத்தம் 47 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். சுழற்பந்துகளையும், வேகப்பந்துகளையும் எதிர்கொள்ளும் போது காலை நகர்த்தி ஆடும் கலையை ரெய்னா மறந்துவிட்டாரா எனத் தெரியவில்லை.

இந்த போட்டியில் ஒரு ரன் சேர்த்த நிலையில் ரஷி்த் வீசிய 31-வது ஓவரில் ரெய்னா ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கேப்டன் விராட் கோலி 71 ரன்களில் வெளியேறினார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

கே.எல். ராகுல் 2 போட்டிகளில் வாய்ப்பு பெற்றும் சரியாக விளையாடவில்லை என்றாலும் கூட மற்ற வீரர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளோடு ஒப்பிடும்போது இன்னும் சில வாய்ப்புகளை வழங்கி இருக்கலாம்.

ஆமை வேகத்தில் பேட்டிங்

பினிஷிங் மன்னன் என்று புகழப்படும் தோனி கடந்த போட்டியில் 57 பந்துகளைச் சந்தித்து 36 ரன்கள் அடித்தது ரசிகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆதலால், இந்த போட்டியில் தோனியிடம் இருந்து அதிரடி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனக்கு வயதாகிவிட்டதை நிரூபிக்கும் வகையில் 66 பந்துகளைச் சந்தித்து 42 ரன்கள் மட்டுமே சேர்த்து தோனி ஆட்டமிழந்தார். இதில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும்.

காலை நகட்டி வைத்து, பேக்புட், பிரன்ட் புட் பேட்டிங் என்ற பேட்டிங் முறை இருப்பதை தோனி மறந்துவிட்டாரா எனத் தெரியவில்லை. அனைத்துப் பந்துகளையும் ஒரே மாதிரி பேட்டிங் யுத்தியால் எதிர்கொண்டார்.

அதிகமான பந்துகளை தேய்த்த தோனியின் ஸ்டிரைக் ரேட் 68 மட்டுமே நேற்று இருந்தது. இந்த தொடரில் தோனி மொத்தம் 79 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

இந்த போட்டியிலும் கோலியுடனும், ஹர்திக் பாண்டியாவுடனும் இணைந்து விளையாடியபோது, தோனி ரன் குவிக்க மிகவும் சிரமப்பட்டார். தோனி களத்துக்கு வந்த பின் 5 ஓவர்களுக்கு பின்தான் பவுண்டரியை காண முடிந்தது. தோனி நிலைத்து ஆடி இருந்தால் அணியின் ஸ்கோர் 280 ரன்களை எட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மஞ்சள் நிற ஆடை?

யோயோ டெஸ்ட்டில் வெற்றி பெறும் வீர்ர்களால் அணியின் வெற்றியை தீர்மானித்துவிட முடியாது. தோனியைப் பொருத்தவரை நீலநிற உடையில் விளையாடும் போதும், மஞ்சள் நிற ஆடையில் விளையாடும் போது அவரின் பேட்டிங் ஆவேசத்தில் பல மாற்றங்கள் தெரிகிறது. ஒருவேளை இந்திய அணயியின் சீருடையையும் மஞ்சளாக மாற்றினால்தான் தோனி சிறபபாக விளையாடுவாரா எனத் தெரிவில்லை.

அடுத்து வரும் டெஸ்ட் தொடருக்கும் தோனிக்கும் சம்பந்தம் இல்லை என்பதால், இந்த தொடருடன் தோனி நாட்டுக்கு திரும்பிவிடலாம். ஒட்டுமொத்தத்தில் தோனிக்கு இந்த இங்கிலாந்து தொடர் சொல்லிக்கொள்ளும் விதத்தில் அமையவில்லை.

இளம் கபில்தேவ் என்று வர்ணிக்கப்படும் ஹர்திக்பாண்டியா 21 ரன்கள் சேர்த்து தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்தார். கடைசி வரிசையில் களமிறங்கிய புவனேஷ்குமார் 21 ரன்களில் ஆட்டமிழந்தார், ஷர்துல் தாக்கூர் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2 வீரர்கள்

இந்த ஒருநாள் தொடரில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், 3 போட்டிகளிலும் இந்திய அணி 140 ஓவர்களைச் சந்தித்து விளையாடியுள்ளது. ஆனால், 2 வீரர்கள் மட்டுமே சிக்ஸர்கள் அடித்துள்ளனர். முதல் போட்டியில் ரோகித் சர்மா 4 சிக்ஸர்கள் அடித்தார், 2-வது போட்டியில் இந்திய அணி தரப்பில் ஒரு வீரரும் சிக்ஸர் அடிக்கவில்லை, இந்த போட்டியில் கடைநிலை வீரர் ஷர்துல் தாக்கூர் 2 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஆக இந்த தொடரில் 2 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ரஷித், வில்லி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

Leave a comment

Your email address will not be published.