பல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்!

பல பாஸ்போர்ட்டுகளை வைத்துக்கொண்டு டிமிக்கி கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளார். #NiravModi #PNBFraud
புதுடெல்லி,
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர்.
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை இந்திய விசாரணை முகமைகள் நாடியது. நிரவ் மோடியின் பாஸ்போர்ட்டையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ரத்து செய்தது. இந்நிலையில் விசாரணை முகமைகள் கண்களில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக நிரவ் மோடி ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்து பயணம் செய்து டிமிக்கி கொடுத்தது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, லண்டன், பெல்ஜியம், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் நிரவ் மோடி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியது. அவர் இருக்குமிடம் தெளிவாக இன்னும் தெரியாத நிலையே தொடர்கிறது. நிரவ் மோடிக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் விடுக்க இன்டர்போலிடம் சிபிஐயை கோரிக்கைவிடுத்தது. இந்நிலையில் ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் நிரவ் மோடி பயணம் செய்தது தெரியவந்து உள்ளது. இந்திய பாஸ்போர்ட்டில் லண்டனில் இருந்து பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு ரெயிலில் பயணம் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 நிரவ் மோடி இப்போது விமானங்களில் பயணம் செய்வதை தவிர்த்து ரெயிலில் பயணம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. நிரவ் மோடி பிரஸ்ஸல்ஸ் நோக்கி பயணம் செய்த போது அவருடைய பாஸ்போர்ட் தகவல்களை பெற்ற ஐரோப்பிய அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை இந்திய அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published.