பாதுகாப்புத் துறை கூடுதல் ஒத்துழைப்பு: இந்தியாவை கூட்டாளியாக சேர்க்க அமெரிக்க செனட் ஒப்புதல்

இந்தியாவுடன் பாதுகாப்புத் துறையில் கூடுதல் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான சட்ட மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்புத் துறையில் ‘இந்தியா மிகப்பெரிய கூட்டாளி’ என்ற அந்தஸ்தை கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்கா வழங்கியது. இதன்மூலம் அதிநவீன மற்றும் மிக முக்கியமான தொழில்நுட்பங்களை இந்தியா வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவுடன் கூடுதலாக பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டால்தான் அந்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியும் என்று அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், 716 பில்லியன் டாலர் ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யும் ‘தேசிய பாதுகாப்பு அதிகார சட்டம் (என்டிஏஏ) -2019’ மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை (செனட்) நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன.

இந்த மசோதாவுக்கு கீழவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிவிட்டது. செனட்டும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், தேசிய பாதுகாப்பு அதிகார சட்ட மசோதா, கூட்டு கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். கமிட்டி ஒப்புதல் கிடைத்த பிறகு மீண்டும்வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன்பின் அதிபர் ட்ரம்ப்பின் ஒப்புதலுக்காக வெள்ளை மாளிகைக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும்.

 

Leave a comment

Your email address will not be published.