பால் முதல் கார் வரை அனைத்து பொருட்களுக்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி விதிக்க முடியாது: பிரதமர் மோடி திட்டவட்ட அறிவிப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி அளித்த  பேட்டியில், ‘‘பால் முதல் கார் வரை அனைத்து பொருட்களுக்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி.யை விதிக்க முடியாது’’ என்று திட்டவட்டமாக  அறிவித்தார். ‘ஒரே நாடு; ஒரே வரி’ என்ற கொள்கையின் அடிப்படையில், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை கடந்தாண்டு ஜூலை  1ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும்  மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும்  கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பல்வேறு பொருட்களுக்கு அவ்வப்போது வரி  குறைக்கப்பட்டு வருகிறது. இந்த வரி விதிக்கப்பட்ட பிறகு, வரிவசூல் பலமடங்கு தாண்டி சாதனை படைத்துள்ளது.இந்நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மோடி நேற்று  அளித்த பேட்டியில் கூறியதாவது:ஜிஎஸ்டி.யை அறிமுகம் செய்த ஓராண்டுக்குள் மறைமுகமாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால்,   பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கலால் வரி, சேவை வரி, மாநிலத்தில் உள்ள மதிப்பு கூட்டு வரி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜிஎஸ்டி  என்ற புதிய வரி திட்டத்தில், மறைமுக வரிகள் எளிமையாக்கப்பட்டு அதிகாரிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள்,  வணிகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் இருந்து உரிய ஆலோசனைகள் பெறப்பட்டு, ஜிஎஸ்டி திட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு  வருகிறது.

ஒரே வரியின் கீழ் அனைத்து பொருட்களையும் கொண்டு வருவது எளிது. ஆனால், உணவு பொருட்களை பூஜ்ய சதவீத வரியில் கொடுக்க முடியாது.  பாலுக்கும், மெர்சிடஸ் காருக்கும் ஒரேவிதமான வரி விதிக்க முடியுமா? இதை காங்கிரஸ் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்.  காங்கிரசாரின் கோரிக்கையை ஏற்று அனைத்து  பொருட்களுக்கும் 18 சதவீதம் வரி விதித்தால் உணவு மற்றும் அத்தியாவசிய  பொருள்  மீதான வரியில் குழப்பம் ஏற்படும். கடந்தாண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தபட்ட பிறகு ஒரே ஆண்டில் 48 லட்சம் புதிய தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 11  கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். ஜிஎஸ்டி.யை கடினமான ஒன்றாக நினைத்திருந்தால், இத்தனை பேர் கணக்கு  தாக்கல் செய்திருப்பார்களா? மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதால், லாரி டிரைவர்கள் தங்கள்  பொன்னான நேரத்ைத வீணாக்காமல் சரக்கு பொருட்களை உரிய நேரத்தில் கொண்டு செல்கிறார்கள். 17 வரிகள் மற்றும் 23 செஸ் வரிகளை ஒரே வரியில் இணைத்ததால் எளிமை, வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி.யால் கூட்டாட்சி முறை தழைத்துள்ளது. மாநிலங்களும், சிறு மற்றும் குறு தொழில் முனைவோரும்  பயனடைந்து உள்ளனர்.

இதுவரை 400 பிரிவுகளில் உள்ள பொருட்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதில், 150 பிரிவுகளில் அடங்கிய பொருட்களுக்கான வரி பூஜ்யமாக உள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து நடைமுறைகளும் ஆன்லைனில் நடப்பதால் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு பிரதமர் கூறினார். இனிமேல் தான் சிறந்த பலன்:  மத்திய  அமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுத்து வருகிறார். எதிர்க்கட்சிகள் கூறும் விமர்சனங்களுக்கு டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பதிலளித்து வருகிறார். ஜிஎஸ்டி ஓராண்டு நிறைவை முன்னிட்டு நேற்று அவர் காணொளி  மூலம் 21 நிமிடங்கள் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:
ஜிஎஸ்டியை  அமல்படுத்திய பல்வேறு நாடுகளில் இடையூறுகள் ஏற்பட்டது. இது, இந்திய  பொருளாதாரத்திலும் எதிரொலித்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரச்னை தீர சிறிது  காலமாகும். ஏப்ரல்-ஜூன் நிதி காலாண்டில் நேரடி வரி வசூல் அதிகரிக்க  ஜிஎஸ்டி வரி உதவுகிறது. நாட்டுக்கான ஜிஎஸ்டி.யின் சிறந்த பலன் இனிமேல்தான்  வரும் என நம்புகிறேன். வரி வசூல் அதிகரிக்க கூடும். ஜிஎஸ்டியால்  வணிகம் மற்றும் வியாபாரம் மிகப்பெரிய அளவில் விரிவடையும். மேக் இன் இந்திய  மற்றும் வியாபார நிறுவனங்கள் உச்சத்தை தொடும். மொத்த உள்நாட்டு  உற்பத்தியிலும் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். இ-வே கூட  அமல்படுத்தப்பட்டுள்ளது. விலை பட்டியலிலுடன் இ-வே பில்லை பொருத்தினால் வரி  ஏய்ப்பை எளிதில் கண்டு பிடித்துவிடலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

‘வரி வசூல் அதிகரிக்கும்’
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா நேற்று அளித்த பேட்டியில்,  ‘‘கடந்த  நிதியாண்டில் ஜிஎஸ்டி சராசரி வசூல் ரூ.89,885 கோடியாக இருந்தது. கடந்த  ஏப்ரல் மாதம் இந்த வசூல் ரூ.1.03 லட்சம் கோடியாக  உயர்ந்தது. கடந்த மே  மாதம் ரூ.94,016 கோடியாகவும், கடந்த மாதம் ரூ.95,610 கோடியும்  வசூலிக்கப்பட்டுள்ளது. போலி ரசீதுகள்,  மோசடிகள் போன்றவை நடைபெறாமல்  இருந்தால், ஜிஎஸ்டி வசூல் மேலும் உயரும்’’  என்றார்.

Leave a comment

Your email address will not be published.