பிஎஸ்என்எல் நஷ்டம் ரூ.4,785 கோடி: தொலைத் தொடர்பு துறை அமைச்சர் தகவல்

பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 2017-18 நிதியாண்டில் ரூ.4,785 கோடி நஷ்டம் அடைந்திருப்பதாகவும், வருவாய் ரூ.27,818 கோடியாக குறைந்திருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-16 நிதியாண்டில் ரூ.4,859 கோடியும், 2016-17 நிதியாண்டில் ரூ.4,786 கோடியும் பிஎஸ்என்எல் நஷ்டத்தை சந்தித்ததாகவும், இந்த நிலையில் கடந்த நிதியாண்டுகளைவிட 2017-18 நிதியாண்டில் நஷ்டம் ஓரளவு குறைந்து ரூ.4,785 கோடியாக உள்ளதாகவும் (தற்காலிக மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தாத முடிவுகள்)  மக்களவையில் அளித்த எழுத்துபூர்வமான பதிலில் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் 2016-ம் நிதியாண்டில் ரூ.32,411 கோடியாகவும், 2017-ம் நிதியாண்டில் ரூ.31,533 கோடியாகவும், 2018-ம் நிதியாண்டில் ரூ.27,818 கோடியாகவும் உள்ளதாகவும் ( தற்காலிக மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தாத முடிவுகள்) மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

மூன்றாண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால் பொதுத் துறை அமைப்புகள் துறையின் (டிபிஈ) அறிவுறுத்தலுக்கு ஏற்ப வலுகுறைந்த பாதிக்கப்பட்ட நிறுவனமாக பிஎஸ்என்எல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனத்தின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை தொலைத் தொடர்பு துறை தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எம்டிஎன்எல்

மற்றொரு பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனமான எம்டிஎன்எல் 2018-ம் நிதியாண்டில் ரூ.2,971 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. 2017-ம் நிதியாண்டிலும் எம்டிஎன்எல் இதே அளவு நஷ்டம் அடைந்திருந்தது. 2016-ம் நிதியாண்டில் நஷ்டம் ரூ.2,006 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் வருவாய் 2016-17 நிதியாண்டின் ரூ.3,552 கோடி என்பதில் இருந்து ரூ.3,116 கோடியாக சரிவு கண்டுள்ளது.

இணைப்பு இல்லை

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை ஒன்றாக இணைப்பதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதால் இரு நிறுவனங்களையும் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மனோஜ் சின்ஹா கூறினார்.

Leave a comment

Your email address will not be published.