பிரிட்டிஷ் படை அணிவகுப்பில் தலைப்பாகையுடன் பங்கேற்ற சீக்கிய வீரர்

பக்கிங்காம் அரண்மனையில் நடந்த பிரிட்டிஷ் படைகளின் அணிவகுப்பில் முதல்முறையாக சீக்கிய வீரர் தலைப்பாகையுடன் பங்கேற்றார்.

பிரிட்டிஷ் அரச குடும்ப ஆட்சியின்போது போருக்குப் புறப்படும் முன்பு பல்வேறு படைப் பிரிவுகள் பக்கிங்காம் அரண்மனை முன்பு அணிவகுக்கும். இதை நினைவுகூரும் வகையில் 1748-ம் ஆண்டு முதல் மன்னரின் பிறந்தநாளையொட்டி பக்கிங்காம் அரண்மனை வளாகத்தில் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

பக்கிங்காம் அரண்மனை வளாகத்தில் நடந்த பிரிட்டிஷ் படைகளின் அணிவகுப்பில் சீக்கிய வீரர் சரண்பிரீத் சிங் லால், தலைப்பாகை அணிந்து பங்கேற்றார்.

அதன்படி ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் பக்கிங்காம் அரண்மனை வளாகத்தில் பிரிட்டிஷ் படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அந்த நாட்டு ராணுவத்தின் ‘கோல்ட்ஸ்டிரீம் கார்ட்ஸ்’ படைப் பிரிவைச் சேர்ந்த சீக்கிய வீரர் சரண்பிரீத் சிங் லால் (22) தலைப்பாகையுடன் பங்கேற்றார்.

இந்தப் பிரிவு படை வீரர்கள் தங்கள் சீருடையான கருப்பு பேன்ட், சிவப்பு கோட், கருப்பு தொப்பி அணிந்து அணிவகுப்பில் பங்கேற்றனர். சீக்கிய வீரர் சரண் பிரீத் சிங் லால் மட்டும் சீக்கியர்களின் டர்பன் (தலைப்பாகை) அணிந்து அணிவகுப்பில் கலந்து கொண்டார். பக்கிங்காம் அரண்மனை அணிவகுப்பில் டர்பன் அணிந்த வீரர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த அணிவகுப்பு பிரிட்டன் மட்டுமன்றி ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதில் சீக்கிய வீரர் மட்டும் தனி அடையாளத்துடன் தெரிந்தார். இதுகுறித்து அவர் கூறியபோது, “கடந்த 2016-ல் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தேன். பக்கிங்காம் அரண்மனை அணிவகுப்பில் டர்பன் அணிந்து பங்கேற்றது மிகவும் பெருமையாக இருந்தது. சீக்கியர்கள் மட்டுமன்றி அனைத்து மதப் பிரிவினரும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேரலாம் என்பதற்கு நானே முன்னுதாரணம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.