பிரேசில் நாட்டு மக்களுக்கு கால்பந்து மதம் என்றால் அந்த நாட்டு வீரர்கள்தான் கடவுள்கள். அந்த அளவுக்கு அங்குள்ள மக்களுக்கு கால்பந்து மீது தீரா பற்றுண்டு. பிரேசிலில் குழந்தைகளைப் பெறும் தாய்மார்கள் தங்களுக்கு பெண் குழந்தைகள் பெற்றால் அதிக பூரிப்படைவார்களாம். அதேபோல ஆண் குழந்தைகள் பெற்றால் அதைக் கொண்டாடுவார்களாம்.
அந்தக் குழந்தை தவழ்ந்து நடக்கத் தொடங்கும் காலத்தில் குழந்தைக்கு கால்பந்து ஆர்வத்தை உணவோடு சேர்த்து ஊட்டி விடுவார்களாம். நீ சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டை பழக வேண்டும். உலகம் போற்றும் உன்னத வீரனாக வரவேண்டும். கால்பந்து விளையாட்டில் உலகக் கோப்பையை நாட்டுக்காக வென்று கொடுக்கவேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள் இந்த நாட்டுத் தாய்மார்கள்.

உணவு ஊட்டும்போது சரி, தாலாட்டுப் பாடும்போதும் சரி குழந்தைகளின் காதில் கால்பந்து என்ற சொல்லை மந்திரம் போல ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள் இந்தத் தாய்மார்கள். இந்தத் தாலாட்டு பிரேசில் நாடு உலக கால்பந்துப் போட்டியில் கோப்பையை வெல்வதற்காகத்தான். தாய்மார்களின் தாலாட்டுதான் அவர்களுக்கு கால்பந்து மீது அதிக பற்று வருவதற்குக் காரணம் என்று கால்பந்து ஜாம்பவான்கள் கூறுகின்றனர். கால்பந்து மீதும், கால்பந்து ரசிகர்கள் மீதும் அவர்களுக்கு அத்தனைப் பற்று. குழந்தைகளுக்கு பள்ளியில் கல்விப் பயிற்சிகள் ஒருபக்கம் இருக்க, மாலையில் நிச்சயம் கால்பந்து பயிற்சி கட்டாயம் உண்டு.
உலகத் தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் பிரேசிலில் இருந்து உருவாகியுள்ளனர். பீலே, காஃபு, ரொனால்டோ, ரொமாரியோ, ரிவால்டோ, ரொனால்டினோ, கிளாடியோ டபாரெல், துங்கா, ராபர்டோ கார்லோஸ், லுாசியோ, நெய்மர் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் பிரேசில் 3 முறை கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்தவர் கருப்பு வைரம் என அழைக்கப்படும் பீலே. 1958, 1962, 1970-களில் அணிக்காக கோப்பையை வென்றெடுத்தார் பீலே.
1994-ல் ரொமாரியோவின் அற்புதமான ஆட்டத்தால் கோப்பை பிரேசில் வசமானது. 2002-ல் ரொனால்டோவின் அட்டகாச ஆட்டத்தால் கோப்பை மீண்டும் பிரேசிலுக்கே கிடைத்தது. உலகக் கோப்பையில் பிரேசிலுக்காக அதிக கோலடித்தவர் ரொனால்டோதான். 15 கோல்களை அவர் அடித்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக பீலே 12 கோல்கள் அடித்துள்ளார்.
5 முறை இதுவரை உலகக் கோப்பையை பிரேசில் கைப்பற்றியுள்ளதன் மூலம் கால்பந்தில் அதன் பலத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அர்ஜென்டினா, ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளைப் போலவே வேறு கண்டங்களில் நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையும் பிரேசிலுக்கு உண்டு. மேலும் இதுவரை நடந்த அத்தனை உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள அணி என்ற சாதனையையும் அந்த அணி தக்க வைத்துள்ளது. 20 முறை உலகக் கோப்பையில் பங்கேற்று சாதனை படைத்துள்ள பிரேசில் அணி இந்த முறையும் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று ரஷ்யாவில் கால் பதித்துள்ளது. கோப்பையுடன் திரும்பவேண்டும் என்ற பிரேசில் மக்களின் வாழ்த்துக்களுடன் ரஷ்யாவுக்கு அந்த அணியினர் வந்துள்ளனர். 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றி வீரர்கள் வருவதற்காக இப்போதே சம்பா நடன மங்கைகள் பிரேசிலில் தயாராகி விட்டனர்.