டிமென்ஷியா என்பது ஒரு குறிப்பிட்ட நோய் கிடையாது. தினசரி வாழ்வில் இடையூறு செய்யும் அளவிற்குக் கடுமையான மனத் தளர்ச்சி அல்லது குறைபாடுகள், டிமென்ஷியா என்ற சொல்லால் வழங்கப்படுகிறது.
இப்போது பெரும்பாலானோர்க்கு ஞாபக மறதிதான் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல், அனைவருக்கும் ஞாபக மறதிதான். இதற்கு என்ன காரணம்? அப்படி என்னதான் பிரச்னை இப்போது? நமக்கு இருக்கும் மிகப் பெரிய நண்பனும் எதிரியும், வேறு யாரும் இல்லை, தொழில்நுட்பம் மட்டும்தான். அதீதமாகத் தொழில்நுட்பத்தை, குறிப்பாக மொபைல் மற்றும் இணையத்தை நம் வாழ்வுக்குள் அனுமதித்ததுதான் இதற்கான முக்கியமான காரணம். இப்படி ஏற்படும் ஞாபக மறதி, கவனக் குறைபாடு ஆகியவற்றை `டிஜிட்டல் டிமென்ஷியா’ (Digital Dementia) என்று சொல்வோம். சற்று விரிவாகப் பார்க்கலாம்:
முதலில், டிமென்ஷியா என்றால் என்ன?
டிமென்ஷியா என்பது ஒரு குறிப்பிட்ட நோய் கிடையாது. தினசரி வாழ்வில் இடையூறு செய்யும் அளவுக்குக் கடுமையான மனத் தளர்ச்சி அல்லது குறைபாடுகள், டிமென்ஷியா என்ற சொல்லால் வழங்கப்படுகிறது. ஞாபக மறதி டிமென்ஷியாவின் ஒரு எடுத்துக்காட்டு.
அல்ஸைமர் என்பது பொதுவாகப் பலருக்கும் ஏற்படும் டிமென்ஷியா ஆகும். மூளை செல்களில் பாதிப்பு ஏற்படுமாயின், இப்பிரச்னை வருகிறது. டிமென்ஷியாவின் அறிகுறிகள் பலதரப்பட்டதாக இருக்கிறது. ஆனால், முக்கியமான செயல்பாடான இவற்றுள் ஏதேனும் இரண்டு அறிகுறிகள் இருந்தால் அது டிமென்ஷியா
Ø மொழிவளம் மற்றும் பேச்சுத்திறன்
Ø கவனம் செலுத்தும் திறன்
Ø தர்க்க அறிவு
Ø காட்சிகளை உணர்தல்
டிஜிட்டல் டிமென்ஷியா என்றால் என்ன? (Digital Dementia)
அதிகமான டிஜிட்டல் பொருள்களின் பயன்பாட்டால், மூளையில் ஏற்படும் பிரச்னைதான் டிஜிட்டல் டிமென்ஷியா. தலையில் அடிபட்டாலோ, வேறு ஏதேனும் பாதிப்புக்குள்ளானாலோ ஏற்படும் மூளைப் பிரச்னைகள், டிஜிட்டல் பொருள்களின் பயன்பாட்டால் ஏற்படுகிறது. அதிகளவில் மொபைல், இணையம் பயன்படுத்துபவர்களுக்கு, அறிவுசார் விஷயங்களில் (Cognitive Abilities) குறைபாடு ஏற்படுகிறது. ஞாபக மறதி, கவனச் சிதறல் இவற்றில் மிக முக்கியமான அறிகுறிகள்
யாருக்கு டிஜிட்டல் டிமென்ஷியாவால் பாதிப்பு ஏற்படுகிறது?
டிஜிட்டல் பொருள்களை, அதாவது மொபைல், இணையம், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் நம் தினசரி வாழ்வுக்குப் பயன்படும் செயலிகள் ஆகியவற்றை அதிகமாகச் சார்ந்திருக்கும் நபர்களுக்கு இப்பிரச்னை ஏற்படும். ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இப்போதெல்லாம், யாருக்கும் தங்களுடைய மொபைல் எண்ணைக்கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. பிறந்தநாள், திருமணநாள் மற்ற நாள்களை மொபைலில், ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வைத்துக்கொள்கிறோம்; கணக்குக்கு கால்குலேட்டர்; வாசிப்பதற்கு கிண்டில் என்று அனைத்துமே மொபைல் கையில் ஒப்படைத்துவிட்டோம்.
இது பற்றி மனநல நிபுணர் அபிலாஷா அவர்களிடம் பேசினோம்…
என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது?
§ அவர்களுக்குள் emotional development நடப்பதே இல்லை. இதனால், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. மேலும், சமூகமாக இயங்குவதிலும் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்.
§ 19 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூளை வளர்ச்சியில் பிரச்னை ஏற்படாவிட்டாலும் ஞாபக மறதி, கவனக்குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.
§ ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் இணையச் செயல்பாடுகளில் அதிகமாக ஈடுபடுவதன் மூலமாக, நிஜ வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு விர்ச்சுவல் உலகில் அவர்கள் வாழ்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியில் கட்டாயமாக வர வேண்டிய சூழலில், அவர்களால் நிஜ வாழ்வை எதிர்கொள்ள முடியாது. மீண்டும் மொபைலுக்குள் செல்கிறார்கள். நம் வீடுகளிலும் சரி, எங்கு போனாலும் சரி, எல்லோரும் மொபைலில் மூழ்குவதற்கு இதுதான் காரணம்.
§ ஒரு சிறு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை.
§ ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சராசரி பிரச்னைகளைக்கூட கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.
§ படிப்பில் கவனமில்லாமை, எந்த ஒரு சூழலிலும் மனதை ஒருநிலைப்படுத்த முடியாதது, ஒரு சிறு விஷயத்தைக் கூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாதது, டிஜிட்டல் டிமென்ஷியா ஏற்படுத்தும் பெரிய, பரவலான பிரச்னை.
§ மூளை வளர்ச்சியில் சமமின்மை இருப்பதால், சம்பந்தமில்லாத சிந்தனைகள், பதற்றம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.
§ மனிதாபிமானம், பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்வது ஆகிய பண்புகள் இல்லாமல் போய்விடும்.
டிஜிட்டல் டிமென்ஷியா எதனால் ஏற்படுகிறது?
– முதல் காரணம், அதீதமான மொபைல் பயன்பாடு
– அனாவசியமான இணையதள பயன்பாடு
– வீடியோ விளையாட்டுகள்
– நம் வாழ்க்கைமுறை
– முறையாக மூளைக்கான செயல்பாடுகள் இல்லாமல் போவது
டிஜிட்டல் டிமென்ஷியாவைக் கட்டுப்படுத்தும் வழிகள்:
1. பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே மொபைலை அறிமுகம் செய்யக் கூடாது. குழந்தைகள் முன், பெற்றோரும் அதிகமாக மொபைல் பயன்படுத்தக் கூடாது.
2. குழந்தைகளின் ஞாபக சக்தியை வளர்க்கும் செயல்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். எண்கள், முக்கியமான தேதி, வரைபடங்கள், குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லும் வழிகள் ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்வது, ஞாபகத்திறன் சம்பந்தமான விளையாட்டுகளை விளையாடச் செய்யலாம்.
3. அனைத்து வகையான தொழில் நுட்ப பயன்பாட்டையும் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் என்ற கால அளவுக்குள் சுருக்கி விடலாம். மொத்தமாக நிறுத்துவது, பிரச்னையைப் பெரிதாக்கும் என்பதால், இப்படி பயன்பாட்டு நேரத்தைப் படிப்படியாக குறைக்கலாம்.
4. வீட்டில், படுக்கையறை, சமையலறை, சாப்பிடும் இடம், படிக்கும் இடம் ஆகிய இடங்களில் மொபைல், தொலைக்காட்சி, கணினி இல்லாமல், அதை Screen-free zoneஆக மாற்றி விட வேண்டும்.
5. முடிந்தளவு, பல விஷயங்களை நினைவில் வைக்கப் பழக வேண்டும். எல்லாவற்றையும் மொபைலில் பதிவிடாமல், மூளையில் பதிவிட வேண்டும்!
6. புதிய மொழி ஒன்றைக் கற்கலாம். இது மூளையின் வலது பாகத்துக்கு வேலை கொடுக்கும்.
7. விளையாட்டு, உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
8. புத்தகங்கள் வாசிக்க வேண்டும்; கிண்டில், மொபைலில் அல்லாமல், புத்தகத்தை வாங்கி வாசிக்க வேண்டும். இது மூளைக்கு நல்ல புத்துணர்வைக் கொடுக்கும்.
9. குழந்தைகளை வீட்டிலேயே மொபைலுடன் வாழ வைக்காமல், நிஜ வாழ்வுக்குக் கொண்டு வர வேண்டும். வேறு குழந்தைகளுடன் விளையாடுவது, பேசுவது போன்றவற்றில் அவர்களை ஈடுபட வைக்க வேண்டும்.
10. குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்த வேண்டும். ஓவியம் வரைவது, கதைகள் எழுதுவது, இசைக்கருவிகள் வாசிப்பது என்ற செயல்களை ஊக்குவிக்க வேண்டும்.
டிஜிட்டல் டிமென்ஷியா ஒரு பெரிய பிரச்னைதானா?
நிச்சயமாக பெரிய பிரச்னைதான். தெற்குக் கொரியாவில், 1990களில் இணையப் பயன்பாடு மிகவும் பரவலானது. தற்போது அங்கிருக்கும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் டிஜிட்டல் டிமென்ஷியா மிக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது, இந்தியாதான் உலகிலேயே இளமையான நாடு. நம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடமும் இப்பிரச்னை தொடங்கியிருக்கிறது. ஃபேஸ்புக்குக்கு நம் குழந்தைகள் அடிமையாகி வருவதும் அதிகரித்திருக்கிறது. இதுதான் தீர்வை நோக்கிச் செல்வதற்கான சரியான நேரம். இல்லையென்றால், இன்னும் சில ஆண்டுகளில் `டிஜிட்டல் டிமென்ஷியா’ சாதாரணமாக எல்லோருக்கும் இருக்கும் பாதிப்பு என்றாகிவிடும்.
சிறிய வயதில் பள்ளியில் மனப்பாட பாடல்கள் சொல்லி தருவதே நினைவாற்றலைப் பெருக்கத்தான் மொபைல் டிஜிட்டல் பயன்பாடு இன்னும் பல விளைவுகளைத் தரும் என்பது இக்கட்டுரையின் வாயிலாக தெரிகிறது.