பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்புக்கு பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்: வேலைவாயப்புத் துறை இயக்குநர் ஜோதி நிர்மலாசாமி அறிவிப்பு

வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் பா.ஜோதி நிர்மலாசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக 2011-ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் ‘https://tnvelaivaaippu.gov.in’ இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படு கிறது.

தற்போது 2018-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், 16 முதல் 30-ம் தேதிவரை அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான பணிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை, வேலைவாய்ப்புத்துறையின் இணையதளத்தில், ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

மாணவர்கள் ஏற்கெனவே 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்திருப்பின், அவ்வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன், மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில், தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுகி பிளஸ் 2 கல்வித்தகுதியை கூடுதலாக பதிவு செய்யலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவு செய்யலாம்.

Leave a comment

Your email address will not be published.