புதிய இயங்குதளம் தேடலில் கூகுள்… முடிவுக்கு வருகிறதா ஆண்ட்ராய்டு காலம்?

ஃபியூஷியா இயங்குதளம் ஒருவேளை பயன்பாட்டுக்கு வந்தால் ஆண்ட்ராய்டின் ஆதிக்கம் முடிவுக்கு வரக்கூடும்.

ஸ்மார்ட்போனை எந்த நிறுவனம் வேண்டுமானாலும் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், அதைப் பலரது கையிலும் கொண்டு சேர்த்த பெருமை ஆண்ட்ராய்க்குத்தான் உண்டு. ஆண்ட்ராய்டின் முதல் பதிப்பு 2008-ம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று வெளியிடப்பட்டது. ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியடைந்தது ஆண்ட்ராய்டுதான்.

மொபைல்கள்

10 வருடங்களுக்கு முன்னர் மொபைல்கள் பரவலாகத் தொடங்கிய போது கூட சிம்பியன், ஐஒஸ், விண்டோஸ் போன்ற மென்பொருள்களே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. ஏனென்றால் அதன் மூலமாக மட்டுமே நல்ல வருவாயைப் பெற முடியும் எனப் பல மொபைல் நிறுவனங்கள் நினைத்திருந்தால் அதில் மட்டுமே கவனம் செலுத்தின. ஆனால், கூகுள் சற்று வித்தியாசமாக யோசித்து ஆண்ட்ராய்டைக் களமிறக்கியது. ஓப்பன் சோர்ஸ் இயங்குதளம் என்பதால் மொபைல்களின் விலையும் குறைந்தது. இன்றைக்கு உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளம் ஆண்ட்ராய்டுதான். கடந்த ஆண்டுக் கணக்கின்படி உலகம் முழுவதிலுமுள்ள ஆண்ட்ராய்டு பயனாளர்களின் எண்ணிக்கை 2 பில்லியன் என்ற அளவில் இருக்கிறது. தற்பொழுதும் இந்த இயங்குதள விஷயத்தில் தன்னை அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்திக்கொள்ள நினைக்கிறது கூகுள். அதன் காரணமாகவே உருவாகியிருக்கிறது ஃபியூஷியா (Fuchsia).

கூகுளின் புதிய தேடல் ஃபியூஷியா

கூகுள்  ஃபியூஷியா

ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக புதிய இயங்குதளம் ஒன்றை கூகுள் உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு தகவல் வெளியானது. ஆனால், அது உறுதிப்படுத்த முடியாத தகவலாக இருந்தது. அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து இதற்கான கோட் (code)-களை கூகுள் இணையத்தில் பதிவேற்றம் செய்ததன் மூலமாக அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. ஃபியூஷியா எனப் பெயரிடப்பட்ட இந்த இயங்குதளத்தை உருவாக்கும் பணியில் 100 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள்  ஈடுபட்டு வருகிறார்கள். பல காலமாக இது பற்றிய தகவல் அதிகமாக வெளியாகாமல் இருந்தது. ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்னால் ஆண்ட்ராய்டு தொடர்பான விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் 5.06 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்த பின்னர் மீண்டும்  ஃபியூஷியாவைப் பற்றிய செய்திகள் மீண்டும் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் தற்பொழுது ஸ்மார்ட்போன்களில் மட்டுமன்றி டிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர், ரோபோ எனப் பல கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர கணினிகளுக்கான குரோம் இயங்குதளத்தையும் கூகுள் உருவாக்கியிருக்கிறது. தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் திறன் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் கூகுளும் அதற்காகத் தயாராகி வருகிறது. அதற்கான முயற்சியில் ஒரு பகுதியாக ஃபியூஷியா இருக்கக் கூடும் எனவும் குரல் மூலமாக இடப்படும் கட்டளைகளைச் செயல்படுத்துவது இதன் முக்கிய அம்சமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது பல வகைகளில் மேம்பட்டுவிட்டாலும்  கூட ஆண்ட்ராய்டு இயங்குதளம் தொடக்கத்தில் ஐஒஸ் இயங்குதளத்தைப் போலவே இருந்ததாக ஒரு பேச்சு இருந்து வந்தது. அதைப் போல ஒன்று இந்த இயங்குதள விஷயத்தில் தோன்றிவிடக் கூடாது என்பதில் கூகுள் உறுதியாக இருக்கிறது. அதனால் ஃபியூஷியா முற்றிலும் புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இதன் தோற்றம் வேறு எந்த இயங்குதளத்தையும் பிரதிபலித்து விடாத அளவுக்கு இதைக் கவனமாக வடிவமைத்து வருகிறது கூகுள்.

ஆண்ட்ராய்டைப் பொறுத்தவரையில் ஓப்பன் சோர்ஸாக இருந்தாலும் அதற்கான அப்டேட்கள் சரிவரக் கிடைப்பதில்லை. பாதுகாப்பு வசதிகளும் செயல்திறனும் குறைவாகவே இருக்கிறது. எனவே, வலிமையான அதே சமயம் பாதுகாப்பான இயங்குதளத்தை உருவாக்குவதற்கான இரண்டாவது வாய்ப்பாக இதைக் கூகுள் நினைக்கிறது. கூகுளின் தயாரிப்புகள் அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைப்பதுதான் ஃபியூஷியாவின் முக்கிய நோக்கம். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அதன் தயாரிப்புகளில் ஃபியூஷியாவைப் பயன்படுத்தும் முயற்சியில் கூகுள் இறங்கும் எனத் தகவல்கள் வெளியானாலும் அதற்கு மாற்றுக்கருத்தும் இருக்கிறது. ஃபியூஷியா தொடர்பான திட்ட வரைபடத்தில் தற்பொழுது வரையில் சுந்தர் பிச்சை கையெழுத்திடவில்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

சுந்தர் பிச்சை

“கூகுளின் ஓப்பன் சோர்ஸ் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பரிசோதனையில் ஒன்றுதான் ஃபியூஷியா. ஆனால் அது தொடர்பாக வேறு எந்தத் தகவலையும் தற்பொழுது வெளியிட முடியாது” என்று கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்திருக்கிறார். ஃபியூஷியா இயங்குதளத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் கூகுள் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் தற்பொழுது வரையில் அதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஃபியூஷியா ஒரு வேளை அறிமுகப்படுத்தப்படலாம் அல்லது கைவிடப்படலாம் அதைப்பற்றி முடிவெடுக்க வேண்டியது கூகுள் கையில்தான் இருக்கிறது.

Leave a comment

Your email address will not be published.